எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 7 மார்ச், 2015

சேர்ந்து போலாமா – திரை விமர்சனம்


0453bfed-6cf2-4f2c-8331-ecc12e80c9a2_S_secvpf

வினய்யும், மதுரிமாவும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். இவர்கள் வளர்ந்து பெரியவர்களாகிறார்கள். வினய், ப்ரீத்தி கிறிஸ்டியனா பாலை காதலிக்கிறார். அவளும் வினய்யை காதலித்து வருகிறாள்.
ஒருநாள் ப்ரீத்தி வினய்யை விட்டு பிரிந்து செல்கிறாள். அவளது பிரிவை தாங்க முடியாத வினய் சோகத்தில் இருக்கிறார். அவளை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து, அவளுடன் சேரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவளை தேடுவதற்காக புறப்படுகிறார். அவனுடன் மதுரிமாவும் இணைந்து கொள்கிறாள்.
இரண்டு பேரும் சேர்ந்து அவளைத் தேடிச் செல்லும்போது ஒரு மர்மக் கும்பல் வினய்யை கொலை செய்யப் பார்க்கிறது. அந்த சண்டையில் குண்டடிபடும் வினய்யை காப்பாற்றி, ஆஸ்பத்திரியில் சேர்க்கிறாள் மதுரிமா.
ஆனால், மதுரிமாவும் வினய்யை கொலை செய்வதற்காகத்தான் அவன்கூடவே பயணித்திருக்கிறார். தனது தம்பியை கொலை செய்தது வினய்தான் என்று தவறாக புரிந்துகொண்டதால் அவனை கொலை செய்ய முயற்சிக்கிறாள்.
ஒருகட்டத்தில் தன்னுடைய தம்பியின் கொலைக்கு காரணம் வினய் இல்லை என்பது தெரிய வந்ததும் அவன்மீது காதல் கொள்கிறாள்.
இதற்கிடையில், வினய், காதலித்த ப்ரீத்தியை இருவரும் தேடிக் கண்டுபிடிக்கிறார்கள். அவள் பணத்துக்காக வேறு ஒருவனை திருமணம் செய்துகொண்டதை அறிந்ததும் அவளை வெறுத்து ஒதுக்குகிறார் வினய்.
மதுரிமாவின் காதலை புரிந்துகொண்ட வினய், அவளை காதலிக்க ஆரம்பிக்கிறார். இருவரும் சேர்ந்து மதுரிமாவின் தம்பியை கொலை செய்தவர்களை பழிவாங்க தயாராகுகிறார்கள்.
இறுதியில், மதுரிமா தம்பியை கொலை செய்தவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை பழி வாங்கினார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.
ழுக்க முழுக்க நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட படம். நாயகன் வினய், வழக்கம்போல் ரொம்பவும் அலட்டல் இல்லாமல், எளிமையான தோற்றத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொடர்ந்து படங்களில் ஒரே மாதிரியான நடிப்பை வெளிப்படுத்துவதால் அவரை ரசிக்க சற்று தயக்கமாக இருக்கிறது.
நாயகியாக மதுரிமா படம் முழுக்க கவர்ச்சியான உடையில் கவனிக்க வைக்கிறார். தம்பியை கொன்றவனை பழிவாங்க துடிப்பதில் நீலாம்பரியாக தெரிகிறார். இன்னொரு நாயகியாக வரும் ப்ரீத்தி கிறிஸ்டியனா பால் ஒருசில காட்சிகளே வருகிறார். படத்தில் இவருடைய நடிப்பு பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
தம்பி ராமையாவின் நகைச்சுவை ரசிக்கும்படியாக இல்லை. நகைச்சுவை என்ற பெயரில் கருத்தை சொல்ல நினைத்தாலும், அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. தலைவாசல் விஜய் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
இயக்குனர் அணில்குமார், நண்பர்களுக்குள் ஏற்படும் பிரச்சினையை மையப்படுத்தி ஒரு கதையாக உருவாக்கியிருக்கிறார். அதில் காதலும் கலந்து சொல்லியிருக்கிறார்.
நியூசிலாந்தில் அழகான இடங்களை தேர்வு செய்து ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. இடங்களின் தேர்வில் இருந்த கவனம் கதையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
சஞ்சீவ் சங்கரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சிகளும் அருமையாக வந்திருக்கிறது. அருவியின் கீழ் எடுக்கப்பட்ட அந்த பாடல் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்துள்ளது.
விஷ்ணு மோகன் சித்தாராவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம்தான். பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘சேர்ந்து போலாமா’ மனதில் பதியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக