எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 15 மார்ச், 2015

வாழ்க்கையின் தத்துவம்

அது, சாமியார்கள் அதிகமாக வசிக்கும் கிராமம். அங்குள்ள பலரும் வாழ்க்கையில் முன்னேற தியானம் அவசியம் என்று நினைத்து அதன்படி செயல்பட்டனர்.
அந்த கிராமத்திற்கு புதிதாக வந்த ஒருவன், தானும் வாழ்க்கையில் நல்ல கதியை அடைய வேண்டும் என்று நினைத்தான். ஆனால், அதற்காக அவன் முயற்சி ஏதும் செய்யவில்லை. தனக்கு கனவில் நல்ல செய்தி வரும் என்று அவன் காத்து இருந்தான்.
ஒரு நாள் நன்றாக சாப்பிட்ட அவன், உண்ட மயக்கத்தில் அயர்ந்து தூங்கிவிட்டான். அப்போது அவனுக்கு ஒரு கனவு வந்தது. கனவில், ஒருவர் பேசுவது போல ஒரு குரல் கேட்டது.
‘‘அருகில் உள்ள காட்டுக்குச் சென்றால், வாழ்க்கையின் அர்த்தத்தை நீ புரிந்துகொள்வாய்’’ என்று அந்தக்குரல் கூறியது.
விழித்து எழுந்த அவன், அந்தக்குரல் கூறியபடி காட்டுக்குள் சென்றான். நெடு நாட்களாக காட்டில் அலைந்து திரிந்தான்.
ஒரு நாள், ஒரு மரத்தடியில், கால்கள் இல்லாத நரி ஒன்று படுத்துக் கிடப்பதைப் பார்த்தான்.
‘‘அடடா! இந்த நரிக்கு கால்களே இல்லையே, இது எப்படி உயிர் வாழ்கிறது’’ என்று அவன் வியந்தான். இதில் தான் வாழ்க்கையின் ரகசியம் அடங்கி இருக்க வேண்டும் என்று நினைத்த அவன், அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்வதற்காக அந்த மரத்தில் இருந்து சற்று தூரத்தில் மறைந்து இருந்து பார்த்தான்.
சிறிது நேரத்தில் ஒரு சிங்கம் அங்கே வந்தது. அது தனது வாயில் மாமிசத்தைக் கவ்வியபடி வந்தது. நரியின் அருகில் வந்ததும் அந்த சிங்கம் மாமிசத்தை நரிக்கு அருகே போட்டது.
உடனே நரி அந்த மாமிசத்தை ஆவலுடன் சாப்பிட்டது.
இதைப் பார்த்ததும் அவன் தனக்குள் இவ்வாறு சொல்லிக்கொண்டான்.
‘‘ நாம் வெறுமனே இருந்தால் போதும் நமக்கு யாராவது இவ்வாறு உதவி செய்வார்கள். இதுதான் வாழ்க்கையின் தத்துவம்’’ என்று கூறிக்கொண்ட அவன், கிராமத்திற்குத் திரும்பினான்.
அதன் பிறகு அவன் சாப்பாட்டிற்கு என்று எதுவும் செய்வது இல்லை. எந்த வேலையும் செய்யாமல் படுத்தே கிடந்தான். நாளாக, நாளாக பசி அவனை வாட்டி எடுத்தது. ஒருநாள் பசி மயக்கத்தில் அவன் தூங்கிவிட்டான்.
அப்போது அவனுக்கு மீண்டும் ஒரு கனவு வந்தது. அதில், முன்பு கேட்ட அதே குரல் மீண்டும் கேட்டது.
‘‘ அடே முட்டாளே! நீ அந்த நரியைப்போல இருக்கக்கூடாது. அந்த சிங்கம்போல இருக்க வேண்டும் என்பதுதான் வாழ்க்கையின் தத்துவம்’’ என்றது அந்தக் குரல்.
அதைக் கேட்ட பிறகுதான் அவனுக்கும் வாழ்க்கையின் தத்துவம் புரிந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக