இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று (02.01.21) சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிலம்பரசன், சுசீந்திரன், பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் பேசியதாவது:
இந்த படத்துக்கு முன் நான் எப்படி இருந்தேன், இப்போது நான் எப்படி இப்படி ஆனேன், எப்படி இந்த படம் முடிந்தது, எப்படி பொங்கலுக்கு வருகிறது என்று பலரும் ஆச்சர்யத்தோடு கேட்டார்கள். சத்தியமாக எங்களுக்கு இதற்கான பதில் தெரியவில்லை. ஊரடங்கின் போது மாநாடு படத்தின் படப்பிடிப்பை எப்போது மீண்டும் எப்போது தொடங்குவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அப்போது அது சாத்தியமாகவில்லை. எனினும் விரைவாக ரசிகர்களுக்காக ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஏற்கெனவே சுசீந்திரனிடம் ஒரு படம் குறித்து பேசியிருந்தேன். மீண்டும் அவரிடம் என்னுடைய யோசனையை தெரிவித்தபோது அவர் சம்மதம் தெரிவித்தார். வீடியோ காலில் தோன்றி என்னிடம் ‘ஈஸ்வரி’ படத்தின் கதையைச் சொன்னார்.
ஊரடங்கு காலகட்டத்தில் அனைவருமே ஒருவித மன உளைச்சலில் இருந்தோம். ஒரு எதிர்மறையான சூழலில் இந்த கதையை கேட்ட போது ஒரு நேர்மறை எண்ணம் உருவானது. கதையை கேட்ட எனக்கே இவ்வளவு நேர்மறை எண்ணம் எழுகிறது. இந்த படம் திரைக்கு வந்தால் மக்களுக்கும் நேர்மறை விஷயமாக இருக்குமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் ‘ஈஸ்வரன்’.
இப்போது எங்கு பார்த்தாலும் எதிர்மறை எண்ணங்கள், பொறாமை, யார் எது செய்தாலும் அதை குறை சொல்லவே ஒரு கும்பல் இருக்கிறது. தயவுசெய்து அறிவுரை சொல்வதை நிறுத்துங்கள். இங்கு அனைவருக்குமே ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அவரவர்க்கு ஏதோ ஒரு வலி இருக்கும், கஷடம் இருக்கும். ஏதோ ஒரு விஷயத்தை அனைவருமே போய்க் கொண்டிருக்கிறோம். முதலில் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் அறிவுரையைக் கேட்பதை நிறுத்துங்கள். என் ரசிகர்களுக்கு ஒரு நண்பனாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். வெளியே எப்படி இருந்தாலும், உள்ளே சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். மனம் சுத்தமாக இருந்தால் எல்லாமே தானாக நடக்கும். என் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் மனதில் வலி இருந்ததால் தான் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை. படப்பிடிப்புக்குக் கூட போகமுடியவில்லை. இறைவன் வேறு எங்கும் இல்லை, நம் இதயத்தில் தான் இருக்கிறார். உள்ளே வருத்தப்பட்டேன் வெளியில் எதுவுமே சரியாக நடக்கவில்லை. உள்ளே சரி செய்ததும் அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது.
அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். போட்டி, பொறாமை, சண்டை இவையெல்லாம் எதுவுமே வேண்டாம்.
இவ்வாறு சிலம்பரசன் பேசினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக