எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 9 டிசம்பர், 2019

தேவதைகளின் தேரோட்டம்-சிறுகதை



   
சென்னையில் இருந்து பாலக்காடு செல்லும் இரயிலில்   நானும் சென்னைக்கு கிளம்பினேன் அலுவலக பணிக்காக.நான் அமர்ந்திருந்த கம்பார்ட்மெண்ட் நிரம்பி வழிந்தது பயணிகளால் .

இரயில் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் எனக்கு இரண்டு விஷயம் நன்றாய் புரிந்தது .என்னை சற்றிலும் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்றும் புரிந்தது .ஜன்னல் ஓரத்தில் ஒரு பெரியவர் மட்டும் அமைதியா உக்காந்துட்டு இருந்தார் .மற்ற அனைவரும் செல்போன் சகிதம் தங்களது கடமைகளை செய்து கொண்டு இருந்தனர் .சிறிது நேரத்தில் அந்த குடும்பம் உணவு பொருட்களை சாப்பிட தொடங்கியதும் நானும் என்னையும் அவர்களுக்குள்


இணைத்துக்கொண்டனர்.அப்போது ஒரு இளம் பெண்"மாமா எதாவது சாப்புடுங்க.அப்ப தான லவ்வர பாக்கும் போது தெம்பா இருக்கும்"என்றதும் மொத்த குடும்பமும்  சிரித்தது .அப்போது கோபமான பெரியவரின்  மனைவி"பேசாமல் வர முடியாது.லவ்வர் அது இதுன்னு"என்றதும் பதிலுக்கு அவர்கள் "இங்க பாருங்கடா கோபத்த.இந்த வயசுல புருஷனோட ஆசைக்காக நீங்க போறதும் இல்லாம மொத்த குடும்பத்தையும் கூட்டிட்டு போறது

எல்லாம் ரோம்ப ஓவர் அத்தை"என்றதும் பதிலுக்கு அவர்"நீங்க பாக்க போறது உங்க மாமனார் வாழ்ந்த ஊர்.அவரே அந்த ஊர் போய் பல வருஷம் ஆச்சு.அங்க இருந்து தான்டி உங்க மாமனுக்கு வாழ்க்கையே ஆரம்பம் ஆச்சு . போதும்மாடி வாயாடி "என்றதும் எல்லோரும் ஒன்றாக "நம்பிட்டோம்"என்றார்கள் .அந்த பெரியவர் சிரித்தபடி ஜன்னலை பார்த்துகொண்டு இருந்தார் .அவர் எதிரில் நான் இருந்தேன் ஆர்வம் தாங்காமல் "சார் நிஜமாவே உங்க காதலிய பாக்க தான் போறீங்களா ?"என்றதும் என்னை  உற்று  பார்த்தவர் என் பக்கத்துல இருந்த அவர் மனைவியின் முகத்த பார்த்தபடியே "ஆமாம்" என்று

தலையசைத்தார் .ஆச்சர்யத்தின் விளிம்பில் நான் "அய்யா என்ன சொல்றீங்க ?மொத்த குடும்பத்தோட போய்ட்டு இருக்கீங்க ?"என்றதும் அவர் சிறிதும் தாமதிக்காமல் "அவளை பாக்கணும்னு நான் நினைக்குறத விட என் குடும்பத்தார் அதிகமா நினைக்குறாங்க .அந்த அளவுக்கு அவள பத்தி அவுங்களுக்கு தெரியும் .அவள பத்தி பேசாத நாள் இருக்காது .என்னோட மனைவி என்னோட தாய்க்கும் மேல .என்னோட காதல மதிக்குற மனைவி கிடச்சது கடவுள் கொடுத்த பாக்கியம் தம்பி"என்று அமைதியானவரிடம்"சார்

இதுக்கும் மேல நீங்க உங்க காதல பத்தி சொல்லலைன்னா என்னால நிம்மதியா  டிராவல் பண்ண முடியாது.ப்ளிஸ் சொல்லுங்க"என்றதும் அவர்  சொல்ல சம்மதித்ததும் புதிதாய் கதை கேட்பது போல் அவரது மொத்த குடும்பமும் அவரை  சூழ்ந்து கொண்டது .

மெலிதாய்  தனது கண்களை  மூடி கொண்டவர் கடந்து முடிந்த சில அனுபவங்களை வரிசைப்படுத்தி கொண்டதை போல் ஆரம்பித்தார் "இன்னைக்கு இருக்குற நீங்க அனுபவிக்குற எல்லா விதமான சந்தோசத்துக்காகவும் அன்னைக்கு நாங்க பெரிய விலை கொடுக்க வேண்டி இருந்தது பொதுவா சொல்றேன்ப்பா .வெள்ளக்காரன் நாட்டவிட்டு போகும்போது எல்லாத்தையும்  சிதைச்சு தான் கையில தந்தான் .அதை சரி பண்ண வேண்டிய பொறுப்பு பெருசா இருந்தது  எங்களுக்கு.அந்த சமயத்துல தான் எங்க ஊருக்கு வந்து நெய்க்காரப்பட்டி ஜமினுக்கு பங்களா கட்ட ஆட்கள்

தேவைன்னு சொன்னாங்க .விவசாயம் இல்லாத வறட்சியான காலம் அது.வீட்டுக்கு இரண்டு பேர் கிளம்பி  போனோம் .இரயில்ல போயி அங்கிருந்து குதிரை வண்டில கூட்டிட்டு போய் வரிசையா இருந்த குடிசை வீடுல தங்க வச்சாங்க .ராத்திரி பகலா வேலை பாத்துட்டு இருந்தோம் .எங்கள போலவே மதுரையில் இருந்து பல பேர் வந்து இறங்குனாங்க.அதுல தான் அவளும் இருந்தா.தலை நிறைய எண்ணெய் வச்சு படிய தலை சீவி பச்ச கலர் தாவணில

பூ போட்ட ஜாக்கெட் இன்னும் நிறைஞ்சுகிடக்கு அவளோட முதல் அறிமுகம் .புது இடத்துல திருதிருன்னு முழிச்சுட்டு நின்னுட்டு இருந்தா.என்னோட மொத்த கவனமும் அவ மேல தான்.கண் இமைக்க கூட மனமில்லை எனக்கு.வாழ்கையில் சில உருவங்கள் உசிர் உள்ள வரை பதிஞ்சு கிடக்கும் .

 அவளும் எங்களோட வேலைக்கு வந்தா .அவ எங்க வேலை பாக்குறாலோ அங்கேயோ நானும் போய் வேலை செய்வேன் .அவள பாத்துகிட்டே இருப்பேன் .அவ என்னை கவனிச்சாலும் திரும்பி கூட பாக்கவே மாட்டா .அவளோட பார்வைக்காக ஏங்கி போயிருக்கேன் பல சமயம்.எங்க குடிசைகளில் மேஸ்திரி மயில் வீட்ல தான் ரேடியோ இருக்கும் .வேலை முடிஞ்சு கொஞ்ச நேரம் எல்லோரும் ஒண்ணா உக்காந்து பாட்டு  கேட்டுட்டு இருப்போம் அவளும் அவ அப்பா கூட வருவா .எம்.எஸ் .விஸ்வநாதன்

இசையில் காதல் பாடல் வரும்போது அவள நான் பாத்துட்டே இருப்பேன் .ஒரு தடவை அவளோட அம்மாவுக்கு உடம்பு  சரியில்லைன்னு கடுதாசி வர அப்பா மதுரைக்கு  கிளம்பிட்டார்  .அதே  சமயத்துல அவ கால்ல கல்லு விழுந்து காயம் பட்டிருச்சு.அவ அவதிப்பட்டுட்டு இருந்தா நான் பழனிக்கு நடந்து போய் மலையப்ப வைத்தியசாலையில் மருந்து வாங்கிட்டு வந்து என் தங்கச்சிகிட்ட கொடுத்து அனுப்பினேன் . முதல்ல மறுத்தாலும் அப்புறம் வாங்கிக்கிட்டா.எனக்கு அவ்ளோ சந்தோசம் .அவ நடக்கவே முடியாம கஷ்டப்படும் போது என் தங்கச்சிய அனுப்பி வச்சிருவேன்.மாசங்கள் கடந்து போயிருச்சு .என் மனசுல கிடந்தத நானும் தைரியமா சொல்லல .ஊர்

திருவிழாக்கு என் தங்கச்சிய அப்பாவ வரச்சொல்லி அனுப்பிட்டேன்.சமைக்க தெரியாம கஷ்டப்பட்டேன்.வேலை சமயத்துல மரத்துக்கு கீழ உக்காந்து சாப்பிடும் போது அவ எனக்கும் சாப்பாடு போட்டு தந்தா .எனக்கு ஒண்ணுமே புரியல .அவ கிளம்பும் போது "தங்கச்சி வர்றவரைக்கும் சேத்தி சமைக்குறேன்.ராத்திரிக்கு அப்பாகிட்ட கொடுத்து அனுப்புறேன்"என்றாள்

.அப்படியே வானத்துல பறக்குற  மாதிரி இருந்துச்சு .காலையில பழைய சோறும் சின்ன வெங்காயமும்.மதியம் சோளகலியும் கருவாடும்.ராத்திரி மட்டும் சாப்பாடு .அவளோட சமையல் அவ்ளோ நல்லா இருக்கும் .நான் ருசிச்சு சாப்பிடுறத தூரமா நின்னு  ரசிச்சு பாத்துட்டு நிப்பா .பொங்கல் சமயம் அது .பாப்பம்பட்டி சந்தைக்கு போய் அவளுக்கு பாத்து பாத்து தாவணி வாங்கிட்டு வந்து அவ குடிசைக்குள் வீசிட்டு போய்ட்டேன் .பொங்கல்

அன்னைக்கு நான் வாங்கி தந்த தாவணியோட பொங்கல் வச்சா .எனக்கும் கருப்பட்டி பொங்கலோட கரும்பும் வந்துச்சு .எங்களுக்குள் காதல் ஆழமா வளர்ந்து நின்னுச்சு.எந்த சூழ்நிலையிலும் என் மூச்சு காத்து கூட அவ மேல பட்டது கிடையாது .

எங்கள பொறுத்தவரை காதல்கிறது அன்பு செலுத்துறது மட்டும் தான்.அவள கல்யாணம் பேசி முடிக்க ஏற்பாடு பண்ணிட்டு இருந்தேன் .தங்கச்சி  கல்யாணம் முடியட்டும்னு எங்க வீட்ல சொன்னாங்க .நாங்களும் காத்துட்டு இருந்தோம் . ஊரு கடைசி நல்ல தண்ணி கிணருல தண்ணி எடுக்க கூட்டம் கூட்டமா நடந்து போவோம் .அந்த நிலா வெளிச்சத்தில் அவளோடு நடந்து போறது அவ்ளோ புடிக்கும் எனக்கு.அந்த சமயத்துல ஜமின் பங்களா கட்டி

முடிஞ்சு போச்சு .சில பேர் அங்கேயே மாடுகள பாத்துக்க .வயல் வேலை பாக்கன்னு தங்கிட்டாங்க.நிரந்தரமாக .அவளும் அப்பாவோட  தங்கிட்டா.நான் ஊருக்கு போய்ட்டு தங்கச்சி கல்யாணம்  முடிச்சுட்டு திரும்பி வர்றேனு சொல்லிட்டு கிளம்பி வந்தேன் .தங்கச்சி கல்யாணம் முடிவாகி கடைசி நேரத்துல மாப்பிள்ளை பாம்பு கடிச்சு செத்துட்டான் .தங்கச்சி வாழ்க்கை கேள்விக்குறி ஆயிருச்சு.சொந்தத்துல வேற பையன பேசி பாக்கும் போது "என் தங்கச்சிய கட்டிக்கிட்டா நான் உங்க பொண்ண கட்டிக்கிறேன்னு சொல்லிட்டாங்க ."அந்த காலத்துல கல்யாணம் நின்னு போச்சுன்னா

பொண்ணுங்க வாழ்க்கை அவ்ளோ தான்.கண்ண கசக்கிட்ட நின்ன குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.என் பொண்டாட்டி கூட  சுத்தமா வாழ புடிக்கல .நான் அவள தேடிட்டு பழனிக்கு  கிளம்பிட்டேன் .அவ முன்னாடி ஒரு குற்றவாளியா தலைகுனிஞ்சு நின்னேன் .அவ என்னை பார்த்து"உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு .புதுசா கட்டுன பொண்டாட்டிய விட்டுட்டு இங்க வந்துருக்க.அது பெரிய பாவம் .அவளும் என்ன மாதிரி ஒரு பொண்ணு தான்.நீ கல்யாணம் செஞ்சதுல்ல எந்த தப்பும் இல்ல .

என் மேல இருந்த அன்பு அப்படியே உன் பொண்டாட்டி மேல வைக்கனும் .என்னோட வாழ்கையை அவ கூட நீ வாழணும் .போயிட்டு வா.இனி என்னை பாக்க வராத என் மேல சத்தியம் ."என்றதும் நான் கிளம்ப அவளே மீண்டும் "யோவ் நில்லு .எனக்கு ரோம்ப நாள் ஆசை.உன் கைய தொட்டு பாக்கணும்னு பாக்கட்டா?"என்றாள் குழந்தை மாதிரி.எனது கைகளை அவள் முன்பு நீட்டியதும் முதலில் தயங்கியள் பின்பு கைகளை பிடித்து எனது

விரல்களுக்குள் விரல் நுழைத்தாள் .மெதுவா சிரிக்க ஆரம்பிச்சா .என்னால உணர முடிஞ்சது .பொங்கி வரும் துயரத்தை தனது சிரிப்பால் அணை போட்டு தடுக்குறான்னு புரிஞ்சுகிட்டேன் .பிரிய வேண்டும் என்பதற்காகவே பிரிந்தோம் .நீண்ட தூரம் பயணமானேன் .ஆந்திரா வந்து மொழி தெரியாத ஊரில் போராடி புள்ளைகளை நல்லா படிக்க வச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டு வாழ்க்கைய திரும்பி பாக்கும் போது என்னோட வாழ்க்கையில் இன்னும் அழியாத

ஞாபகங்களா அவ இருக்கானு உணர்ந்தேன் .அவள தேடி வந்திருக்கேன் .என்னை விட என் குடும்பத்த சேர்ந்த எல்லோருக்கும் அவள பாக்கனும்னு ஆசை"என்றதும் எல்லோரும் கலைந்தனர் அவரிடம் இருந்து விலகியதும் அவரோட போன் நம்பர் வாங்கிட்டேன் .என்னோட நினைவுகள் எல்லாம் அந்த குடும்பத்தார் நிறைந்திருந்தனர்.மாமனாரை தனது அப்பாவாக நினைக்கும்

மருமகன்களும் ,மருமகள்களும் என்னை வியப்பில் ஆழ்த்தினர்.ஒரு அழகான கூட்டு குடும்பம் .நாட்கள் வேகமாய் நகர்ந்தது.

ஒரு நாள் இரவு அவரிடம் போன் பண்ணி பேசும்போது அவர்"அவள தேடி போனேன் .அவ இப்ப அந்த ஊர்ல இல்லைன்னு தெரிஞ்சு தேடி அலைஞ்சோம்.ஒரு அம்மா எனக்கு தெரியும்னு சொல்லி ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனாங்க .அங்க அவள பாக்க கூடாத கோலத்தில் பாத்தேன் .கை,கால்கள் முடங்கி போய் படுத்த படுக்கையாய் இருந்தா.பேச கூட முடியல

.அவள பக்கத்துல போய் பாக்க தைரியம் வரல .எவ்ளோ கனவோட வந்தேன் அவள இப்படியா பாக்கணும் .இதயமே வெடிக்குற மாதிரி இருந்துச்சு .என்னோட மனைவி  அவள தன்னோட மடியில் படுக்க வச்சுகிட்டா ஒரு குழந்தை போல.என் குடும்பத்த அவளுக்கு அறிமுகம் செஞ்சு வச்சா .கடைசியா நான் போனேன் அவ முகத்த பாத்ததும் கதறி அழுதுட்டேன்

.அவளோட கண்ணும் கலங்கி போச்சு .என்னோட மனைவி தன்னோட புடவை முந்தானையில் அவளின் கண்ணீர் துடைத்தாள் .அவளை பற்றி விசாரிக்க ஆரம்பிச்சேன் .அவள ஒரு கொத்தனார்க்கு கல்யாணம் செய்து தந்தார்கள்  எனவும் மூன்று பெண் குழந்தைகளுக்கு பிறகு அவர் இறந்துவிட்டதாகவும் அதன் பின்பு அவள் இரவு ,பகல் இல்லாமல் உழைத்து எல்லா புள்ளைகளையும் படிக்க வைத்து கல்யாணம் செய்து வைத்தவுடன் இவளுக்கு பக்கவாதம் வர மூன்று பிள்ளைகளும் போட்டி போட்டு கொண்டு கவனிக்கவில்லை என்றும் கடைசியில்  முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டு சென்று விட்டதாகவும் அதன் பிறகு திரும்பி வரவேயில்லை என்பதும் தெரிய வந்தது ."என்று அவர் முடிப்பதற்குள் "சார் அவுங்க இப்ப எங்க?"என்றதும் அவர்"அவள பாத்துட்டு வந்த மறுநாள் அவள நாங்க கூட்டிட்டு போக முடிவு பண்ணிட்டு இருக்கும் போது என் மூத்த  பையன் மகேஷ் வந்து "அப்பா அவுங்க இங்க இருக்க வேண்டாம்.நாம பாத்துக்கலாம்.அவுங்களும் எங்களுக்கு அம்மா தான்ப்பா"என்றதும் அவனை கட்டி பிடித்து அழுதேன் .என் பிள்ளைகள் மனிதர்களின் உணர்வுகள மதிக்கும் படி வளர்த்திருக்கேன்."என்றதும் என்

கண்களில் வழிந்த நீரை துடைத்தப்படி "நீங்க ரோம்ப நல்லவர் சார்.வாழ்க்கையில் உங்கள மட்டும் மறக்கவே மாட்டேன் .அப்புறம் சார் மறந்துட்டேன் .உங்க பேரு என்ன ?அவுங்க பேரு என்ன?"என்றதும் அவர் "என் பேரு முத்துச்சாமி.என் மனைவி பேரு பாண்டி மீனா .அவ பேரு மரகதம்"என்று இணைப்பை துண்டித்தார்.வாரம் ஒரு முறை தவறாமல் பேசி கொள்வோம் .



    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக