எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 9 டிசம்பர், 2019

தேங்காய் பன்


சேலத்தில் எனது தந்தையார் புகழ் பெற்ற ஸ்வீட் ஸ்டால் & ஓட்டல் வைத்திருந்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் தின்பண்டங்கள் வாங்கி வரவே மாட்டார்கள்.. அப்படி வந்தால் சாத்துக்குடியும் ஆப்பிளும் தான்.. முதன் முதலில் காவல் துறையில் பணிபுரிந்த எங்கள் அசோகன் அண்ணன் எங்களுக்கு ஒரு தின்பண்டம் கொண்டு வந்திருந்தார்!

அவரது சீருடை போன்ற காக்கி நிறத்திலேயே பெரிய காகிதப் பொட்டலம்..
அதிலிருந்து கிளம்பிய நறுமணம் இதுவரை எங்கள் கடை இனிப்புகளில் கூட நுகர்ந்ததில்லை.. கவரைப் பிரித்தால் பிஸ்கெட் கலரும் பிரவுனும் கலந்த பொன் பழுப்பு நிறத்தில் அழகாக முக்கோணவடிவில் வெட்டப்பட்டிருந்த பன்! முதலையின் தாடைகள் போல அதற்கு இடையில் ஒரு பிளவு.!

அப்பிளவிற்குள் வறுத்துத் துருவிய சர்க்கரைப் பாகில் ஊறிய தேங்காய் துருவல்கள் பொடித்த ஏலக்காய்  என அமர்க்களமாய் இருந்தது.. எத்தனையோ ஸ்வீட் வகைகள் எங்கள் ஓட்டலில் நாங்கள் சாப்பிட்டாலும் இந்த பன்னை ஒரு கடி கடித்ததும் தேங்காய் பாகும் பன்னின் சுவையும் கலந்து நாவிற்கு முதன் முதலில் வேறு ஒரு புதிய சுவை அனுபவத்தை தந்தது.!

அப்போது சேலத்தில் புகழ் பெற்ற பேக்கரி ஹென்றி உல்சி பேக்கரி.! கோட்டை மாரியம்மன் கோவில் வாசலில் வந்து நின்றாலே ஹென்றி உல்சியின் ருசிக்கத் தூண்டும் பிஸ்கெட் மணம் அந்தக் காற்றில் கலந்து வீசும்.. இந்த வரியை டைப் செய்யும் போது கூட நாசியில் அந்த மணம் வந்து போனது.! அண்ணன் தேங்காய் பன்னை அறிமுகப்படுத்தி விட்டதால்..

அடுத்து எப்போதும் எங்கள் தின்பண்ட விருப்பத்தின் டாப் டென்னில் விராட் கோஹ்லி போல முதலிடத்தில் தேங்காய் பன்னே இருந்தது.. ஒரு முறை அப்பாவுடன் ஹென்றி உல்சிக்கு நேரடியாக போன போது தேங்காய் பன் கேட்ட போது பெரிய தட்டு போல வட்ட வடிவில் ஒரு மெகா பன்னை கடைக் காரர் எடுத்தபோது.. அப்பா இது தேங்காய் பன் கிடையாது..

என நான் கத்த நினைத்தபோது கத்தியால் கடைக்காரர் அதை முக்கோணமாக ஸ்லைஸ் செய்தார்.! இக்காலத்து பீட்ஸாவின் முன்னோடி தேங்காய் பன் தான் என இன்று புரிகிறது.. அதுவும் ஹென்றி உல்சியின் தரம் அவர்களின் ஸ்பாஞ்ச் போன்ற மென்மையான பன் அதில் தேங்காய் பாகு என அதன் சுவையே அலாதியாக இருக்கும். ஹென்றி உல்சி திடீரென மூடப்பட்டது!

அப்போது என்ன காரணம் என்று தெரியவில்லை அதன் பிறகு நல்ல தேங்காய் பன்னிற்கு அலைந்தோம்.. கிடைக்கும் பன்களில் இனிப்பு தூக்கலாக இருந்து தொலையும்.. அல்லது பன் வரட்டி போல காய்ந்து இருக்கும்.. தேங்காய் பன்னின் அடிப்பகுதி அந்த இனிப்பான தேங்காய் கலவை இருக்காததால் அதை அவ்வளவாக சாப்பிடமாட்டார்கள்.. தூக்கி எறிந்துவிடுவார்கள்.!

ஆனால் ஹென்றி உல்சி பன்னில் அந்த அடிப்பகுதியும் மென்மையாக சுவையாக இருக்கும் முக்கோண பன்னின் கூரிய உச்சியில் இருந்து கடித்துக் கொண்டே வந்து பாதியில் நிறுத்தி பிறகு அடிப்பக்கத்து பன்னையும் சுவைத்துவிட்டு இப்போது சாண்ட்விச் போல ஆகிவிட்ட தேங்காய் பன்னை சுவைப்போம் அந்த அனுபவத்தை சேலத்தில் வேறு எந்த பேக்கரி பன்னாலும்..

எங்களுக்குத் தரமுடியவில்லை.. கடலில் விழுந்த மலேசிய விமானத்தை தேடுவது போல எங்கள் தேடல் இருந்தது.. அப்போது தான் முதன்முதலில் பெங்களூர் அய்யங்கார் பேக்கரிகள் ஆங்காங்கே தலை காட்ட ஆரம்பித்து இருந்தன.. சரியாக எங்கள் ஓட்டலுக்கு நேர் எதிரேலேயே ஒரு அய்யங்கார் பேக்கரி கிளை திறக்கப்பட்டது! மூச்சிரைக்க ஓடி அங்கு போய்..

முதலில் நாங்கள் கேட்டது தேங்காய் பன் தான்.. பொதுவாக அய்யங்கார் பேக்கரிகளில் பன்னின் தரம் பிரமாதமாக இருக்கும் ஆதலால் மீண்டும் நல்ல தேங்காய் பன் சாப்பிடும் வாய்ப்பு இம்முறை தேங்காயுடன் டூட்டி ஃப்ரூட்டி பழங்களும் சேர்ந்து விட்டதால் பன்னின் நடுவில் பச்சை சிவப்பு மஞ்சள் என டிராஃபிக் சிக்னல் விளக்குகள் போல அவை மின்னும்.!

ருசியும் வேறுவிதமாக இருந்தது.. இடையில் அவர்கள் கடையிலேயே தில் குஷ் என்னும் தேங்காய் பஃப்ஸ் அறிமுகம் ஆனது.. இன்றைய பஃப்ஸின் முன்னோடி.. தேங்காய் பன் போல மிருதுவாக இன்றி பஃப்ஸ் போல கெட்டியான மேல்புறம் நடுவில் கொழுக்கட்டை பூரணம் போல முந்திரி திராட்சை டூட்டி ஃப்ரூட்டி தேங்காய் எல்லாம் கலந்து பிரமாதமாக இருந்தது! (தற்போது பல பிரத்யேக வெரைட்டிகளில் கிடைக்கிறது)

அதன் இரகசியம் வேறு ஒன்றுமில்லை பேக்கரியில் தயாராகும் அத்தனை பிஸ்கெட்டுகள், பன்கள், இனிப்புகளின் மிச்சங்கள் (வெட்டும் போது மீதியாவது) கேக்குகள், இவற்றை மொத்தமாக இடித்து தேங்காய் கலவையுடன் கலந்து தருவதே தில் குஷ் அதாவது அது ஒன்றை சாப்பிட்டாலே கடையில் உள்ள அத்தனை பிஸ்கெட் & இனிப்புகளை சாப்பிட்ட மாதிரி.!

அவ்வப்போது தெருக்களில் முன்பக்கம் பெரிய அலுமினியப் பெட்டி வைத்து வரும் மூன்று சக்கர வண்டியில் வரும் நடமாடும் பேக்கரியில் பிரிம்ரோஸ் பேக்கரியின் தேங்காய் பன் ஹென்றி உல்சிக்கு அடுத்து எங்களை சுவையில் மகிழ்வித்தது. உலகம் முழுவதும் இதைவிட பல மடங்கு ருசியில் தேங்காய் பன் சாப்பிடும் வாய்ப்பை கடவுள் அருளியிருந்தாலும் இன்றும் நினைவில் இருப்பது சேலத்து ஹென்றிஉல்சி தேங்காய்பன்னே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக