உலகநாயகன் சூரியபகவானின் தர்மபத்தினி சமுக்ஞாவிற்கு இப்போதெல்லாம் ஒரே தர்மசங்கடம்.
இல்லற வாழ்க்கைக்கு இடையூராக இருப்பதே சூரியனின் கடும் வெப்பம்தான். நெருங்கவே முடியாத நெருப்பாக இருப்பவரிடம் இருந்து கொஞ்சம் காலம் விலகி இருந்தால் என்ன?
இந்த எண்ணத்திற்கு சூரியன் சம்மதிக்க மாட்டார் என்பதும் தெரியும். தன் மீது அளவில்லா அன்பு வைத்திருப்பவர், தற்காலிக பிரிவிற்கு கூட தயாராக
இருக்க மாட்டார். அதனால் அவருக்கே தெரியாமல் எதையாவது செய்தால்தான் உண்டு.
இந்த சிந்தனையின் முடிவில் ஒரு தீர்மானத்திற்கு வந்து விட்டாள் சமுக்ஞா. தன் தவசக்தியாலும், கர்பின் வலிமையாலும் தன்னைப் போலவே ஒரு பெண்ணை படைத்தாள். தன் நிழல் உருவாய். அவள்தான் சாயாதேவி.
நிழல்பெண் வணங்கி நின்றாள்.
சாயா... நான் சிறிது காலம் என் தந்தையார் வீட்டிற்கு சென்று வருகிறேன். அதுவரை என் உருவாய் இருக்கிற நீ, என் கணவருக்கு பிரியமான மனைவியாக இருந்து பிரியாமல் வாழ்ந்து வருவாயாக.
என் குழந்தைகளை உன் குழந்தையாக பாவித்து அன்பு காட்டிவா என்று அறிவுரை வழங்கி விட்டு பிறந்தகம் சென்று விட்டாள்.
காலங்கள் கடந்தது.
பத்தினி தர்மத்தில் இருந்து சற்றும் விலகாத சாயாதேவி சூரியனின் அன்புக்கு பாத்திரமானாள். இவர்கள் இனிய இல்லறத்திற்கு சான்றாக இருமகன்களும், இரு மகள்களும் பிறந்தார்கள். அதில் முதன்மையானவர்தான் சனிபகவான்.
நாட்கள் நகர்ந்தது. வருஷங்கள் பலவானது. இளைய பிள்ளைகள் வளர்ந்து வாலிபத்தை எட்டினார்கள்.
ஏனோ தெரியவில்லை. சாயாதேவி முன்பு போல் இல்லை. தன் பிள்ளைகளைகளுக்கு தாய்பாசத்தை காட்டியவள், மற்றதார பிள்ளைகளை மாற்றான்தாய் மனப்பான்மையோடுதான் பார்த்தாள்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது யமன். தாயின் செயல் தவறென நினைத்தான்.
தாயன்பு என்பது அனைவருக்கும் சமம். அப்படி இருக்க, சிலரை அன்புடனும், சிலரை வெறுப்புடனும் பார்ப்பது வேதனையாக இருக்கிறது என்று முடிவு செய்தான்.
இருப்பினும்...
தன் மனக்குறையை மறைத்துக் கொண்டு வாழ முடியாத யமன், ஒருநாள் தாயிடம் தர்க்கம் செய்தான். முடிவில் சாயாதேவியை காலால் எட்டியும் உதைத்து விட்டான்.
வந்ததே கோபம் சாயாதேவிக்கு. யமா... நீ செய்த பிழையை மன்னிக்கவே முடியாது. தாயென்று தெரிந்தும் தவறிழைத்தாய்.
ஓ... தெய்வமே... நான் பத்தினி என்பது உண்மையானால். நான் என் கணவருக்கு தூய்மையாக நடந்து கொண்டேன் என்பது உண்மையானால், எட்டி உதைத்த யமனின் கால் அழுகிப்போகட்டும் என்று சபித்தாள்.
பத்தினியின் சாபம் உடனே பற்றிக் கொண்டது. யமனின் கால் அழுக தொடங்கியது. செய்வதறியாது திகைத்த யமன் உடன் சூரியபகவானிடம் சென்று நடந்ததை சொன்னான்.
சூரியனின் நிலை தர்மசங்கடத்திற்கு உள்ளானது. ஒருபுறம் பாசத்திற்கு உரிய மகன். இன்னொறுபுறம் அன்புக்குரிய மனைவி. இதில் யாரை குறை சொல்வது என்றே தெரியவில்லை.
இருப்பினும் தன் ஞான அருளால் நடத்தது என்ன என்பதை அறிந்து கொண்டார். சமுக்ஞா உருவில் இருப்பது வேறு பெண் என்பதையும் அறிந்து கொண்டார்.
இதுநாள்வரை பத்தினி தர்மத்தில் இருந்து தவறாத சாயாதேவியை மன்னித்தார்.
யமனிடம்... மகனே... சாயாதேவி உத்தமி. அவள் இட்ட சாபத்தை விலக்கக் கூடிய சக்தி எனக்கு இல்லை. உடன் பூலோகம் சென்று கோகர்ன மலையின் மீது அமர்ந்து சிவனை நோக்கி தவம் செய்.
அவர் அருளால் சாபம் நீங்கும். அவரே உன் எதிர்காலத்தை தீர்மாணிக்கக் கூடிய நேரமும் வந்து விட்டது. தாமதம் செய்யாமல் உடன் செல்வாயாக, என்றதோடு நின்று விடாமல் கோகர்ன மலைக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டார்.
யமனும் கோகர்ன மலையில் அமர்ந்து தவமும், தியானமும் செய்ய தொடங்கினார். யமனின் தவத்தை மெச்சிய சிவன் நேரில் தோன்றி வரமளித்தார்.
உன் தாயால் ஏற்பட்ட சாபம் இக்கணமே நீங்கி விடும். அதோடு தென்திசைக்கு உன்னையே அதிபதியாக நியமிக்கிறேன். அதோடு நீத்தார் உலகத்திற்கு நீயே பொறுப்பேற்று கடமையாற்றுவாய் என்று வரமளித்தார்.
இதெல்லாம் கேள்வியுற்ற சனிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. மூத்தவர் என்றால் முன்னுரிமை, இளையவன் என்றால் இளக்காராமா? அப்பாவின் செயலை எப்போதுமே மன்னிக்க முடியாது என நினைத்தார் சனி.
மூவர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்தி எண்ணாயிரம் ரிஷிமார்களும் போற்றத்தக்க அளவில், இந்திரபதவிக்கு இணையாக சையமனி பட்டனத்திற்கு தலைவனாக்க உதவிய தந்தையை வெறுத்தார்.
தானும் ஒரு அங்கீகாரத்தை பெறவேண்டும். தேவர்களும் மூவர்களும் போற்றத்தக்க அளவில் உயர வேண்டும் என்ற எண்ணம் சனிக்கு எழுந்தது. தாயை வணங்கி தன் உள்ளக் கருத்தை மெல்ல எடுத்துரைத்தார்.
தாயே... மூத்த சகோதரன் ஒரு முன்மாதிரி ஆகிவிட்டார். நானும் அவரைப்போல் சீரும் சிறப்புடன் வாழவேண்டும். பெயரும் புகழும் பெற வேண்டும்.
தெய்வப்பதவியும், உயர்நிலையும் அடைய அந்த சதாசிவனையே சரணடைய போகிறேன். அனுமதி தாருங்கள்.
சர்வமங்களம் உண்டாகுக. உன் லட்சியம் வெல்லட்டும். மகனே.. நீ காசிக்கு சென்று லிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்துவா. உன் பூஜையின் புண்ணிய பலனால் எண்ணியதை பெறுவாய்.
எவருக்கும் தலைவணங்காத உயர்பதவி பெறுவாய் என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார் சாயாதேவி. காசியில் லிங்கப்பூஜை செய்ததின் பலனாய் அந்த முக்கண்ணன் ரிஷப மூர்த்தியாக காட்சியளித்தார். அந்த லோகநாயகனை, சர்வேஸ்வரனை, சதாசிவனை, சாஷ்ட்டாங்கமாக விழுந்து வணங்கினார் சனி.
மகனே.. உன் பக்தியை மெச்சினோம். நீ ஆதவனின் புதல்வனாக அவதரித்த காரணம் இன்று நிறைவேறப் போகிறது. நீ நவக்கிரக பரிபாலனத்தில் முக்கிய இடம் பெறுவாய்.
இன்றுமுதல் உன்னை ஆயுள்க்காரன் என்று அழைப்பார்கள். நீ பூஜித்த லிங்கம் உன் பெயரால் சனீஸ்வர லிங்கம் என்று உலகம் உள்ளளவும், உயிரின தோற்றம் உள்ளளவும் போற்றப்படும் என்று கூறி மறைந்தார்.
சூரியன் ஆத்மக்காரகன் என்று அழைக்கப்படுகிறார். ஆத்மா என்றால் உயிர் என்று பொருள்.
உயிருக்கு பொறுப்பு வகிக்கும் சூரியனிடம் தீராத பகை கொண்ட சனி ஆயுள்காரகனாக வருவதால், அற்பாயுள், மத்திம ஆயுள், தீர்க்காயுள் என்கிற நிலையை சனிதான் ஏற்படுத்துகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக