தேனி மாவட்டம் மலைக் கிராமத்தில் பழங்குடி இனத்தை சேர்ந்தவராக நாயகன் முரளிராம். இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் திருட்டுத் தொழிலை பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.
ஆனால், முரளிராம் மட்டும் அதிலிருந்து மாறுபட்டு நன்கு படித்து டிகிரி பட்டம் வாங்கி, போலீசில் சேரவேண்டும் என்ற கனவோடு இருந்து வருகிறார்.
இந்நிலையில், அந்த ஊருக்கு புதிய இன்ஸ்பெக்டராக அருள்தாஸ் வருகிறார். அவர் இந்த கிராமத்தில் நடக்கும் திருட்டுத்தனத்தை ஒழிக்க பாடுபடுகிறார்.
ஆனால், அருள்தாஸ் மீதே கிராமத்தில் உள்ளவர்கள் மறைமுகமாக தாக்குதல் நடத்துவதால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்.
அப்பொழுது, முரளிராம் பற்றிய விவரம் அருள்தாசுக்கு தெரிய வருகிறது. அவனை வைத்து கிராமத்தில் உள்ளவர்கள் திருடிக் கொண்டுவந்த பொருளை மீட்க நினைக்கிறார். முரளிராமும் போலீசுக்கு உதவிகள் செய்கிறார்.
இதனால் போலீஸ் உயரதிகாரிகள் மத்தியில் முரளிராமுக்கு நல்ல பெயர் கிடைக்கிறது. இது அருள்தாசுக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் அமைச்சரின் வீட்டிலிருந்து ஒரு பொருளை கிராமத்தில் உள்ளவர்கள் திருடிக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.
அதை மீட்க அருள்தாஸ் மீண்டும் முரளிராமின் உதவியை நாடுகிறார். அதைத் தேடிக் கண்டுபிடித்து கொடுக்கும் முரளிராம், அதற்குள் ரைஸ் புல்லிங் கலசம் இருப்பதை அறிகிறார். அதை அருள்தாசிடம் ஒப்படைக்காமல் அவரைவிட உயரதிகாரியிடம் ஒப்படைக்கிறார்.
தன்னுடைய பொருள் கைநழுவிப் போனதே என்ற வருத்தத்தில் இருக்கும் அமைச்சர், அருள்தாசிடம் முரளிராமை கொல்ல உத்தரவிடுகிறார்.
முரளிராமின் வளர்ச்சி பிடிக்காத அருள்தாசும் அவனைக் கொல்ல காத்திருக்கிறார். இறுதியில், முரளிராமை அருள்தாஸ் கொலை செய்தாரா? அல்லது அருள்தாசின் திட்டத்தை முரளிராம் முறியடித்தாரா? என்பதே மீதிக்கதை.
முரளிராம் தன்னுடைய முதல் படத்திலேயே ஹீரோயிசம் இல்லாமல் ரொம்பவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். மலைக்கிராமத்து பையனாக மனதில் எளிதாக பதிகிறார்.
அதேபோல், நாயகி ரக்சனா ராஜூவும் மலைவாழ் பெண்ணாக அழகாக நடித்திருக்கிறார். அதிக மேக்கப் இல்லையென்றாலும் திரையில் பார்க்க அழகாக தெரிகிறார். முகபாவனையில் மனதை கொல்கிறார்.
சுருட்டு சாமியாக வரும் ஜி.எம்.குமார் வரும் காட்சிகள் கலகலக்க வைக்கிறது. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ் காமெடியிலும், வில்லத்தனத்திலும் கலக்கியிருக்கிறார். மலைவாழ் மக்களின் வாழ்க்கையை அழகாக படமாக்கியிருக்கிறார் இயக்குனர் யுரேகா.
அளவான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அழகுபட சொல்லியிருக்கிறார். எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு மலை கிராமத்தை அழகாக படமாக்கியிருக்கிறது.
ஒவ்வொரு காட்சிகளையும் சிரத்தை எடுத்து பதிவு செய்திருக்கிறார். ராம்பிரசாத் சுந்தரின் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசையும் பரவாயில்லை.
மொத்தத்தில் ‘தொப்பி’ மகுடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக