எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 15 மார்ச், 2015

செவ்வாய் தோசம்

தோசங்களில் மிகவும் கெட்ட தோசமாக செவ்வாய் தோசம் சோதிட சாத்திரத்தில் கூறப்படுகின்றது. செவ்வாய்க்கு எப்படிச் தோசம் ஏற்படுகிறது ?

செவ்வாய் நன்கு பலம் பெற்றிருந்தால் அதாவது ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் தோசம் இல்லை. செவ்வாய் பலவீனப்பட்டு இருந்தால்தான் தோசம் ஏற்படுகிறது. இவ்வாறு ஒருவருக்குச் செவ்வாய் பலவீனப்பட்டு இருக்கும்போது ஏற்படுகிற தோசம் செவ்வாய் தோசம் எனப்படும்.

சாதகப் பொருத்தத்தில் செவ்வாய் தோசம் பெரும் குறையாகக் கருதப்படுகின்றது. சாதகத்தில் செவ்வாய், இலக்கினம், சந்திரன், சுக்கிரனுக்கு 1,2,4,7,8,12 ஆம் இடத்தில் இருந்தால் செவ்வாய் தோசம் இருக்கிறது என்று பொருள். இலக்கினத்தில் இருந்து 2, 4, 7, 8, 12 இந்த வீடுகளில் செவ்வாய் இருந்தால் செவ்வாய்க்கு தோசம் ஏற்படுகிறது. மணப்பெண், மணமகன் இருவர் சாதகத்திலும் இந்த இடம் அமையாவிட்டால் நல்லது. இருவருக்கும் ஒரே மாதிரியான அமைப்பாக இருந்தாலும் நல்லதுதான்.

மிதுனம், கன்னி ஆகிய வீடுகளில் 7 அல்லது 8 ஆம் இடமாக இருந்து அதில் செவ்வாய் இருந்தால் கடும் தோசம் ஏற்படும். அப்படிப்பட்டவர்களுக்கு நடப்பு திசை செவ்வாயாக இருந்தால் மிகவும் பாதிக்கப்படுவர்.

மேடம், கடகம், விருச்சிகம், மகரங்களில் செவ்வாய் குருவோடு சேர்ந்திருந்தாலோ அல்லது குருவால் பார்க்கப்பட்டாலோ செவ்வாய் தோசம் இல்லை.

செவ்வாய் தோசம் ஒருவருக்கு இருந்து மற்றொருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதைப் பார்க்காமல் திருமணம் செய்துவிட்டால் அந்த திசை புத்தி நேரங்களில் கணவரையோ அல்லது மனைவியையோ இழக்க நேரலாம். அல்லது பிரிய நேரலாம். திருமணத்திற்கு முன்பே இருவருக்கும் இந்தச் செவ்வாய் திசை முடிந்துவிட்டால் சிக்கல் இல்லை.

மேற்கூறிய 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்கள் கீழ்க்கண்ட வீடுகளாக இருந்தால் தோசம் இல்லை. அவைகளாவன:

1) மேடம், விருச்சிகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இந்த இரு வீடுகளும் செவ்வாய்க்கு ஆட்சி வீடு என்பதால் தோசமில்லை.

2) மகரம், கடகம் ஆகியவற்றில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இதில் மகரம் செவ்வாய்க்கு உச்ச வீடு என்பதாலும் கடகம் நீச வீடு என்பதாலும் தோசமில்லை.

3) தனுசு, மீனம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை. இது நட்பு வீடாக இருப்பதால் தோசமில்லை.

4) கும்பம், சிம்மம் இதில் செவ்வாய் இருந்தால் தோசமில்லை இதில் கும்பம் சனி வீடாகவும், சிம்மம் சூரியனின் வீடாகவும் இருப்பதால் செவ்வாய் தோசம் அடிபடுகிறது.

5) சந்திரனுடன் செவ்வாய் இணைந்திருந்தால் சந்திர மங்கள யோகம் ஏற்படுகிறது. இதனால் செவ்வாய்க்குத் தோசம் இல்லை.

விவாகப் பொருத்தம் பற்றிச் சொல்லும் வாக்கிய பஞ்சாங்கம் பிராமணருக்கு அதிபதியும், சத்திரியருக்குக் கணமும், வைசியருக்கு பெண் தீர்க்கமும் சூத்திரர்க்கு யோனியும் பிரதானமாகப் பொருந்த வேண்டும் என்கிறது.

விவாகப் பொருத்தத்தில் கூட வேதங்களின் ஓர் அங்கமான சோதிடம் நால்வருணத்தைப் புகுத்தி இருக்கிறது. கோள்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் ஒருவன் பிராமணன், ஒருவன் சத்திரியன், ஒருவன் வைசிகன், ஒருவன் சூத்திரன் என்ற வருண வேறுபாடு தெரியுமா?

சாத்திரமானாலும் சடங்கானாலும் எங்கும் வருணவேறுபாடு சோதிட சாத்திரம் எழுதியவர்களால் திட்டமிட்டுப் புகுத்தப் பட்டுள்ளது. கோள்களை வருண அடிப்படையில் வகுத்திருக்கிறார்கள்.
வருணம் கிரகம் இராசி எண்
பிராமணன் குரு, சுக்கிரன் கடகம், விருச்சிகம், மீனம் 4, 8, 12
சத்திரியன் சூரியன், செவ்வாய் மேடம், சிம்மம், தனுசு 1, 5, 9
வைசிகன் சந்திரன், புதன் இடபம், கன்னி, மகரம் 2, 6, 10

சூத்திரன் சனி மிதுனம், துலாம், கும்பம் 3, 7, 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக