எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

வியாழன், 5 மார்ச், 2015

காதல், திருமணம் யாருக்கு ?

ஜோதிட ரீதியாக காதலுக்கு முக்கிய காரணமாக விளங்கும் கிரகங்கள் சுக்கிரனும், சந்திரனும். இதில் சந்திரன் மனோகாரகன். சுக்கிரன்  காதல், பாலியல் உணர்வுகளுக்கு காரகன். காதல் உணர்வுகளுக்கும் காம விளையாட்டுகளுக்கும் செவ்வாயின் பங்கும் உண்டு. ஏனென்றால், செவ்வாய் பெண்களுக்கு களத்திரகாராகனாவார்.

ஜென்ம லக்னத்திற்கு  5 ம் வீடும் 7ம் வீடும் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் போன்றவையும் பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டாலும், சந்திரன், சுக்கிரன், செவ்வாயுடன் 5,7 க்கு அதிபதிகள் இணைந்திருந்தாலும், அந்த ஜாதகங்களுக்கு காதல் கண் மூடித்தனமாக
அதிகரித்து திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உண்டாகிறது.

சந்திரன் மனோகாரகன் என்பதால் காதல் உணர்வை அதிகம் தூண்டி விடுவார். குரு பகவானிடம் வித்தை கற்கசீடராக சேர்ந்த சந்திரன் அழகாக இருந்ததால், குருவின் மனைவி தாராவின் ஆசை நாயகன் ஆனார்.  இதை அறிந்த குரு உன் அழகினால் தானே இந்தநிலை என சந்திரனை தேய்ந்து வளர சாபமிட்டார். இதனால் தான் சந்திரன் கெட்டதும் பெண்ணாலே என கூறுவார்கள். 

காதல் எல்லை தாண்டினால் பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்து காட்டு. சந்திரனை நிலா என்றும் கூறுவதுண்டு. எத்தனை காதலர்கள் நிலாவைப் பார்த்து பெருமூச்சு விட்டிருப்பார்கள். நிலவின் ஒளியில் மடியில் படுத்து மயக்கமொழி பேசியிருப்பார்கள். நிலா தூது செல்லாது என தெரிந்தும் எத்தனை காதலர்கள் தூது விட்டிருப்பார்கள். காதலர்கள் தம்பதிகள் ஆனதும் முதலில் செல்வது தேனிலவுக்குத் தானே.

திருமணம் என்பது இருமனங்களை ஒன்றுபடுத்தக்கூடிய சமயச் சடங்காகும். அவரவர் மொழிஇனங்களுக்கேற்ப நடத்தப்படும் இந்த சடங்கானது பாரம்பரியமிக்கதாகும். இதிலிருந்து மாறி அவரவர் மனதிற்கேற்றவரை தேர்ந்தெடுத்து அமைத்துக் கொள்ளும் காதல் வாழ்க்கையானது, இந்த சமய சடங்குகள் அனைத்தையும் தாண்டி கலப்புத் திருமணமாகவும் அமைகிறது. ஒருவரின் ஜாதகத்தில் 5ம்  வீடானது பூர்வீதத்தைப் பற்றி குறிப்பிடுவதாகும். இந்த 5ம் வீடானது பாதிக்கப்படுகின்ற போது உறவுகளிலிருந்து விலகி காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை கலப்புத் திருமணம் செய்து கொள்ளக் கூடிய வாய்ப்பு உண்டாகிறது.

ஒருவர் ஜாதகத்தில் 5 ஆம்  வீட்டில் சனி, ராகு, கேது போன்ற பாவகிரகங்கள் அமையப் பெற்றாலும், 5 ஆம் அதிபதி சனி, ராகு கேது சேர்க்கைப் பெற்றாலும், 5 இல் அமையக்கூடிய பாவிகளுடன் 7 ஆம் அதிபதி சேர்க்கைப் பெற்றாலும், 5,7 க்கு அதிபதிகள் இணைந்து உடன் பாவகிரகங்களின் தொடர்பு -ஏற்பட்டிருந்தாலும் காதல் வயப்படக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு திருமணம் செய்யும் வாய்ப்பு உண்டாகும். 5,7 க்கு அதிபதிகள்  பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் ஒருவருக்கொருவர்  பார்த்துக்கொண்டு சனி, ராகு சேர்க்கைப் பெற்றாலும், காதல் ஏற்பட்டு கலப்பு திருமணம் நடைபெறுகிறது.
    
 ஒருவர் ஜாதகத்தில் 7 ஆம் வீடு களத்திர ஸ்தானமாகும். களத்திரகாரகன் சுக்கிரனாவார். 7 ஆம் வீட்டதிபதியும், சுக்கிரனும் சனி, ராகு போன்ற பாவிகளின் சேர்க்கைப் பெற்றிருந்தாலும், 7 இல் செவ்வாய் சனி, ராகு அமையப் பெற்று, சுபர் பார்வையின்றி இருந்தாலும் காதல் திருமணம் கலப்பு திருமணம் நடைபெறுகிறது. 7 ஆம் வீட்டில் கேது அமையப்பெற்று 7 ஆம் அதிபதியும் சுக்கிரனும் கேது சேர்க்கை அல்லது கேது சாரம் பெற்றிருந்தால் காதல் திருமணம், கலப்புத் திருமணம் நடைபெறும். ஜென்ம லக்னத்திற்கு 5ல் 1,7 க்கு அதிபதிகள் இருந்தாலும் 5 ம் அதிபதி பாவியாக இருந்து ஜென்ம லக்னத்தில் அமைந்து 7 ம் வீட்டை பார்வை செய்தாலும் காதலித்து திருமணம் செய்யும் வாய்ப்பு மற்றும் கலப்புத் திருமணங்கள் நடைபெறும் வாய்ப்பு உண்டாகும்.

     ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீட்டில் ராகுபகவான் அமையப் பெற்று, 7 ஆம் அதிபதியும் சுக்கிரனும் ராகு சாரம் பெற்றிருந்தால், சிறிதளவாவது சாதியில் வேறுபட்ட ஒருவரை  கலப்புத் திருமணம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டாகும். ஜென்ம லக்னத்திற்கு 7 ஆம் வீட்டை குறிப்பிடுவது போல சந்திரனுக்கு 7 ஆம் வீட்டில் சனி, செவ்வாய், ராகு போன்ற கிரகங்களில் ஏதாவது இரு கிரகங்கள் அமையப் பெற்றாலும் பழக்கவழக்த்தில் மாறு பட்ட இடத்தில் திருமணம் செய்ய நேரிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக