வீட்டை இயற்கை சூழல் பின்னணியில் அமைக்கவே பலரும் ஆசைப்படுகிறார்கள். அனல் வீசும் வெப்ப சூழலை இதமான தென்றல் தவழும் காலநிலைக்கு மாற்ற மரங்கள் துணைபுரிகின்றன. அதனால் இயற்கை எழில் நிறைந்த பகுதிகளில் இருப்பிடத்தை தேர்ந்தெடுப்பதற்கு பலர் ஆசைப்படுகிறார்கள். வீட்டில் இருக்கும் காலி இடங்களிலும் மரம், செடி, கொடிகள் வளர்த்து இயற்கையின் சுவாசத்தை மாசின்றி அனுபவிக்க முயற்சிக்கிறார்கள். வீட்டில் வளர்க்கப்படும் அல...ங்கார செடிகள் வீட்டின் அழகியலில் பங்கெடுத்துக்கொள்கின்றன.
காய்கறிகள் வகையை சார்ந்த செடிகள் வீட்டின் சமையல் தேவையை பூர்த்தி செய்கின்றன. மரங்கள் நிழல் தரும் இயற்கை குடையாக மாறி வீட்டு பகுதியில் வெப்பத்தின் தாக்கத்தை கட்டுப்படுத்துபவையாக நிமிர்ந்து நிற்கின்றன. வீட்டில் தோட்டம் அமைப்பது பலருக்கு பிடித்தமான வேலையாக மாறி இருக்கிறது. இருக்கும் குறைந்த இடத்திலும் அதற்கு ஏற்ப செடிகளை வளர்த்து தங்கள் செடி வளர்ப்பு ஆசையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். வீட்டு தோட்டத்தில், வீட்டை சூழ்ந்திருக்கும் பகுதியில் வளர்க்கும் மரங்கள், செடிகள் பற்றியும் வாஸ்து சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அத்தகைய மரம், செடிகளை பற்றி பார்ப்போம்.
* வீட்டின் தெற்கு, மேற்கு பகுதிகள் மரம் வளர்ப்பதற்கு சிறந்த இடங்களாகும். அதிலும் தென்மேற்கு பகுதி, தெற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் வேப்பமரம், அரச மரம், ஆலமரம், மாமரம், பலா மரம், சப்போட்டா, முந்திரி, தைல மரம், தென்னை மரம் போன்ற மரங்களை வளர்க்கலாம்.
* வாழை மரம், எலுமிச்சை மரம், மாதுளை மரம், கொய்யா மரங்களையும் வளர்க்கலாம்.
* இடம் இருக்கும் பகுதிகளில் பூஞ்செடிகளை வளர்க்கலாம். மல்லிகை பூஞ்செடி மணம் பரப்புவதுடன் மனதுக்கு உற்சாகத்தையும் தரும்.
* துளசி செடியை மாடத்தில் வைத்தும் வளர்க்கலாம். மண் பரப்பிலும் துளிர்விட செய்யலாம். தொட்டிகளிலும் வளர்க்கலாம். அவை உடல் ஆரோக்கியத்தை பேணும் மருத்துவ குணங்களை தன்னகத்தே பெற்ற மூலிகை செடியாக இருப்பதால் கட்டாயம் வீட்டில் துளசியை இடம்பெற செய்ய வேண்டும்.
* கீரைவகைகள், காய்கறி செடிகளை இடவசதியை பொருத்து தோட்டமாக பயிரிடலாம். அல்லது மண் தொட்டிகளில் வளர்க்கலாம்.
* தென்மேற்கு திசையில் கருவேல மரம் வைக்கலாம். அது வீட்டுக்கு நன்மை தரும் மரவகைகளுள் முக்கியமானது ஆகும்.
* வீட்டு பகுதியில் கண்டிப்பாக புளியமரம் வளர்க்கக்கூடாது.
* வில்வமரம், இலுப்பை மரம், பனைமரம், அவுரி, எருக்கு, மிளகு, அகத்தி போன்ற செடிகளை வீட்டில் வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக