எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 7 மார்ச், 2015

எனக்குள் ஒருவன் - திரை விமர்சனம்


சென்னை,மார்ச்.06 (டி.என்.எஸ்) புரியவில்லை என்றாலும், 'தி இன்ஷெப்ஷன்' என்ற ஆங்கிலப் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், அப்படத்தின் பாதிப்பில் உருவாகியிருக்கும் ஒரு வித்தியாசமான படம் தான் 'எனக்குள் ஒருவன்'.

பழைய திரையரங்கம் ஒன்றில் சாதாரண வேலைப் பார்க்கும் கிராமத்து வாலிபனான சித்தார்த், தூக்கம் வராததால் லூசியா என்ற மாத்திரையை வாங்கி சாப்பிடுகிறார். தூக்கத்துடன் கனவையும் வரவைக்கும் அந்த மாத்திரையின் மூலம் சித்தார்த் காணும் கனவில் அவர் பெரிய திரைப்பட நடிகராக வலம் வருகிறார்.

இதற்கிடையில், தீபா சன்னிதியை காதலிக்கும் சித்தார்த், தனது கனவு உலகத்திலும், தீபா சன்னிதியை காதலிக்கிறார். இப்படி அவர் நிஜ வாழ்வில் தான் சந்திக்கும் கதாபாத்திரங்களை, தனது கனவு உலகத்திலும் எதிர்மறையாக சந்திக்க, இறுதியில் எது கனவு, எது நிஜம் என்பதை  பெரிய திருப்புமுனையோடு சொல்லப்பட்டிருப்பதே இப்படத்தின் கதை.

இரண்டு விதமான கதாபாத்திரங்கள், அந்த கதாபாத்திரங்களின் காதலை மையமாக வைத்து நகரும் திரைக்கதையை, எந்தவிதமான குழப்பமும் இன்றி ரசிகர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் இயக்குனர் சொல்லியிருக்கிறார்.

அப்பாவி இளைஞர் வேடம், பெரிய திரைப்பட நடிகர் வேடம் என்று இரண்டு வேடங்களிலும் சித்தார்த், பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ளார். சாதாரண இளைஞர் வேடத்திற்கு அதிகப்படியான மேக்கப் போட்டிருப்பது சற்று உறுத்தினாலும், திரைப்பட நடிகராக வரும் வேடத்தில், நடிகருக்கான திமிரை ரொம்ப இயல்பாக கையாண்டுள்ளார்.


நாயகி தீபா சன்னதி, பேரழகி இல்லை என்றாலும், ஆடம்பரம் இல்லாத அழகியாக இருக்கிறார். 


கன்னத்து குழி அழகி, சிருஷ்ட்டி டான்கோவுக்கு கொசுறு வேடம் தான். 











ஆடுகளம் நரேனுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல வேடம் கிடைத்துள்ளது. திரையரங்க  உரிமையாளராகவும், நடிகரின் மேனஜராகவும் இரண்டு விதமான நடிப்பை வெளிப்படுத்தி சபாஸ் பெறுகிறார்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் இரண்டு விதமான கதைக்கும் வெவ்வெறு லைட்டிங் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒரு கதை முழுவதும் பிளாக் அண்ட் வொயிட்டில் காண்பிக்கப்பட்ட விதம் வித்தியாசமாக உள்ளது.

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை திரைக்கதைக்கு  பலம் சேர்த்துள்ளது. பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது.

குழம்ப வைக்கும் திரைக்கதை என்றாலும், அதை எந்தவித குழப்பமும் இன்றி, வெட்டி ஒட்டியுள்ளார் எடிட்டர் லியோ ஜான் பால். 

படத்தின் ஆரம்பத்திலேயே, ஒன்று நிஜம் ஒன்று கனவு என்று இயக்குனர் டிவிஸ்ட்டை சொன்னாலும், கோமாவில் இருக்கும் சித்தார்த், அவரைச் சுற்றி நடக்கும் காவல் துறை விசாரணை படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறது.

காவல் துறையின் தேடுதல், எது என்று ரசிகர்களுக்கு தெரிந்த பிறகு, படத்தின் முக்கியமான டிவிஸ்ட்டை இயக்குனர் சொல்லும் விதத்தில் சபாஷ் சொல்ல  வைக்கிறார். அதே சமயத்தில், திரில்லர் பட பாணியில் நகரும் படம், அதற்கான வேகம் இன்றி, ரொம்ப மெதுவாக பயணிப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்துள்ளது.

கரணம் தப்பினால் மரணம், என்ற ரீதியில் இயக்குனர் பிரசாத் ராமர், தான் எடுத்துக்கொண்ட வித்தியாசமான கதையை, ரொம்ப நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.

என்னதான் ஹாலிவுட் ரேஞ்சிக்கு நம் இயக்குனர்கள் யோசித்து படம் எடுத்தாலும், தமிழ் படம் என்றாலே பொழுதுபோக்கு அம்சம் நிறைந்ததாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ரசிகர்கள் கூட்டத்தில் இப்படம் எடுபடுவது கடினம் தான். 

இருப்பினும், பொழுபோக்கு என்பதையும் தாண்டி, வித்தியாசமான படங்களுக்காக காத்திருக்கும் ரசிகர்கள், 'எனக்குள் ஒருவன்' தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ஒன்று என்று சொல்லும் அளவுக்கு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக