2003-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட முருகப்பெருமான் சிலையில் திடீரென்று ஒரு மச்சம் தோன்றியது. அவரது வலது கன்னத்தில் மேல்புறம் சிவப்பு நிறத்தில் அது காணப்பட்டது. இதைக்கண்ட பக்தர்கள் பரவசம் ஆனார்கள். இங்குள்ள முருகப்பெருமானும் ‘மச்சக்காரன்‘ ஆனார்
.
இந்த தகவல் முருகப்பெருமான் - வள்ளி வரலாற்றிலும் உள்ளது.
முருகப்பெருமானை திருமணம் செய்து கொள்வதற்காக வேடர்குல தலைவன் நம்பிராஜனின் மகளாக அவதரித்தாள் வள்ளி. முதன் முதலில் அவளை காண வந்த முருகப்பெருமான், வேடன் உருவத்தில் அங்கே வந்தார். வள்ளியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறினார். ஆனால், வள்ளியோ கோபம் கொண்டு சீறினாள்.
மறுநாள் மறுபடியும் வந்தார் முருகப்பெருமான். இப்போது அவர் வந்தது ஒரு வயோதிகர் வேடத்தில். ஆனாலும், அவரை அடையாளம் கண்டுகொண்டு விட்டாள் வள்ளி. அவரை அடையாளம் காண வைத்தது, அவரது முகத்தில் இருந்த மச்சம்தான். ‘வேடம் போடும்போது மச்சத்தையும் மறைக்க வேண்டும் என்பது தெரியாதா?‘ என்று கேட்ட வள்ளியை, தனது அண்ணன் விநாயகரின் துணையுடன் மணந்து கொண்டார் முருகப்பெருமான்.
அதனால், மேட்டுக்குப்பம் மச்சக்கார முருகப்பெருமான் கோவிலுக்கு வந்து 2 நெய் தீபம் ஏற்றி, 9 எலுமிச்சம் பழங்களை பெற்று வழிபட்டால் 3 மாதத்திற்குள் நல்ல முறையில் திருமணம் நடந்தேறும் என்கிறார்கள். ஆயில்யம், மூலம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், செவ்வாய் மற்றும் ராகு -கேது தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்களும் இங்கு வந்து வழிபடுவதன் மூலம் உடனடியாக திருமண வாய்ப்பை பெற்று மகிழ்கிறார்கள்.
மேலும், இந்த கோவில் குருஜி, சரியாக பேச்சு வராத குழந்தைகளின் நாவில் ‘ஓம்‘ என்ற மந்திரத்தை வேலால் எழுதி, விபூதி கொண்டு நாவில் தடவி, எலுமிச்சம்பழத்தை மந்திரித்துக் கொடுக்கிறார். அதன்பின்னர், அந்த குழந்தைகள் படிப்படியாக நன்றாக பேச ஆரம்பித்து விடுகிறார்கள்.
கழுத்து சரியாக நிற்காமலும், கால் சரிவர நடக்க முடியாமலும் அவதிப்படும் குழந்தைகளுக்கும் இங்கு பரிகாரம் செய்யப்படுகிறது.
மற்றும், வேலைவாய்ப்பு, குடும்ப நம்மதி உள்ளிட்ட பக்தர்களின் பல்வேறு வேண்டுதல்களும் இந்த கோவிலுக்கு வந்து வழிபடுவதன் மூலம் நிறைவேறுகின்றன.
திருமணம் தடைபடுபவர்களுக்கு ஞாயிறு, செவ்வாய், வெள்ளி ஆகிய கிழமைகளில் மாலை வேளையில் பரிகாரங்கள் செய்யப்படுகின்றன. பேச்சு வராத, சரிவர நடக்க முடியாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாதமும் கிருத்திகை அன்று மதியம் 12 மணிக்கு நடைபெறும் அபிஷேகத்திற்கு பிறகு பரிகாரம் செய்யப்படுகிறது.
சொர்ண ஆகர்ஷண பைரவர்
பைரவர் வழிபாட்டில் சிறந்ததாக கருதப்படுவது ‘சொர்ண ஆகர்ஷண பைரவர்‘ வழிபாடு. இந்த பைரவர் இந்த கோவிலில் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு மாதமும் வரும் அஷ்டமி திதியில் இந்த சன்னதியில் பைரவர் ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், பிரத்யங்கிராதேவி ஹோமம் ஆகியவை நடத்தப்படுகிறது.
அன்றைய தினம் சொர்ண ஆகர்ஷண பைரவரை வணங்கினால், அஷ்ட லட்சுமிகளின் அருளும் கிடைக்கும் என்கிறார்கள். மேலும், கடன் தொல்லைகள் நீங்குதல், வியாபார அபிவிருத்தி, வீடு&மனை வாங்கும் யோகம் போன்றவை ஏற்படும் என்றும் சொல்கிறார்கள்.
மேலும், இந்த கோவிலில் கிழக்கு பார்த்த சக்கர விநாயகர், வானத்தீஸ்வரர், தெற்கு பார்த்த கோபால கிருஷ்ணர், தட்சிணாமூர்த்தி, கிழக்கு பார்த்த ஷீரடி சாய்பாபா, மேற்கு பார்த்த சனிபகவான், யோக ஆஞ்சநேயர், லட்சுமணர், சீதை சமேத ஸ்ரீராமர், விஷ்ணு துர்காதேவி ஆகிய தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக