எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 19 மே, 2018

ஊழல்

கடந்த வாரம் ஒரு உணவு விடுதிக்கு சென்றிருந்தேன். எதிரில் அமர்ந்து ஒருவர் அவசர அவசரமாக சாப்பிட்டு கொண்டிருந்தார். 

முழு போதையிலிருந்தார். நான் ஆர்டர் செய்து சாப்பிட துவங்கினேன். "அதை கொண்டு வா.. இதை கொண்டு வா.." என அரட்டி கொண்டிருந்தார். திடீரென அவரை காணவில்லை. சப்ளை செய்த பெண் ஓடி வந்து "சார் இங்க சாப்பிட்டு இருந்தவர பார்த்திங்களா?" என்றார்.

நான் "இல்லையே என்னாச்சு?" என்றேன். "பில் கொடுக்காம போய்ட்டாரு சார். செம போதைல இருந்தாரு. கிச்சன் வரை போய்ட்டு வந்து பார்த்தா காணோம்" என்றார் பரிதாபமாக. "மறந்துட்டு போயிருப்பாரு, திரும்ப வருவாரு" என ஆறுதல் சொன்னேன். 

"இல்ல சார் சாப்பிட்டத எப்படி மறப்பான், போய்ட்டான் சார்.. இந்த காசை என் சம்பளத்தில் தான் பிடிப்பாங்க" என சோகமாக சொன்னார்.

"பில் போட்டா தான பிரச்சனை? பில் போடாதீங்க. கண்டுக்காம விட்ருங்க" என்றேன். "இல்ல சார் இங்க டேப்ல(மொபைலில்) ஆர்டர் எடுத்துட்டு தான் பரிமாறுவோம். 

அது என் பெயருடன் பில் வந்துரும். கஸ்டமர் காசை கட்ற வரை என் பொறுப்பு, எக்ஸ்ட்ரா ஒரு அப்பளம் கூட எடுக்க முடியாது. இன்னைக்கு நேரம் சரியில்ல. அவ்ளோ தான்"

 என்று அவரை சுற்றி தேடியபடி பதட்டமாக பதில் சொன்னார்.
எனக்கு அவன் மீது செம கோவம். அந்த உணவு விடுதியில் ஜிஎஸ்டி எல்லாம் சேர்த்து 200ரூ வரும் சாப்பாடு. அந்த பெண்ணிற்கு சம்பளம் 500ரூ இருக்கலாம். அவளுக்கு
200ரூ என்பது பெரிய தொகை. பாவம் வாரக்கடைசியில் வேலைக்கு வருகிறார் என்றால் நிச்சயம் தேவையிருப்பவராக தான் இருப்பார். பீர் கூட 30ரூ வச்சாலும் வாங்கி குடிக்கிறான். 

சாப்பிட்டதுக்கு குடுக்காம போய்ட்டானே என எனக்குள் பேசிக்கொண்டேன்.
நான் சாப்பிட்டு கை கழுவிவிட்டு வந்தேன். அந்த பெண் என்னுடைய பில்லை வைத்துகொண்டு என்னை தேடிக்கொண்டிருந்தார். (நானும் ஓடிட்டேன்னு நினைச்சுட்டார் போல  ) நான் வந்து பில்லை வாங்கினேன். 

முன்பு சாப்பிட்டவனுடைய பில்லிற்கும் சேர்த்து கொடுத்தேன். "இல்லை அதெல்லாம் வேணாம் சார்" என மறுத்தார். "யாருக்கோ சாப்பாடு வாங்கி கொடுத்த மாதிரி நெனச்சுக்குறேன் வைங்க" என்றேன்.

"வேணாம் சார். நீங்க என்ன பண்ணுவிங்க" என மறுத்தார். ஆணாக இருந்தால் வற்புறுத்தி கொடுத்திருப்பேன். அதற்கு மேல் வற்புறுத்தி நாம வழியிறோம்ன்னு நினைச்சுட்டா? சரி என என் பில் மட்டும் கட்டினேன். 

ஆனாலும் அவருடைய சம்பளத்தில் பாதியை இழப்பதை சக மனிதனாக என்னால் ஏற்க முடியவில்லை. அப்போது அதே டேபிளில் இன்னொருவர் வந்து அமர்ந்தார்.
எனக்கொரு யோசனை தோன்றியது. அந்த பெண்ணை அழைத்து "இப்ப வந்து உக்கந்திருப்பவர்ட்ட டேப்ல ஆர்டர் எடுக்குற மாதிரி சீன் போட்டு ஆர்டர் எடுக்காதீங்க. 

சாப்பிட்டதும் அந்த பழைய பில்ல குடுத்துருங்க" என்றேன். "இல்ல சார் வேணாம்" என மறுத்தார். "உங்க ஹோட்டலுக்கு 200ரூ பெரிய இழப்பில்ல. உங்களுக்கு பெரிய இழப்பு. கண்டுபிடிச்சு கேட்டா சாரி மறந்துட்டேன்னு முடிச்சுருங்க" என்றேன்.

ஒருவாரம் கழித்து மீண்டும் சென்றேன். என்னை பார்த்ததும் வேறு டேபிளில் நின்றிருந்தவர் ஓடி வந்து "சார் நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன். 200ரூ தப்பிச்சது" என்றார் உற்சாகமாக. உள்ளே சென்று எக்ஸ்ட்ரா ஒரு அப்பளம் கொண்டு வந்து வைத்தார். "அப்பளம் எடுத்தா மாட்டிப்பேன் சொன்னிங்க?" என்றேன். "அதெல்லாம் பார்த்துக்கலாம்" என்றார் தைரியமாக. வாட் எ சேஞ்ச் ஓவர்.

இந்த பொண்ணுக்கு நல்லது பண்ணிருக்கோமா? கெட்டது பண்ணிருக்கோமா? என எனக்குள் கேட்டு கொண்டேன். அதுக்காக அப்பளத்த விட முடியுமா? சாப்பிட்டு விட்டு கிளம்பினேன். அன்று அந்த ஒருவன் செய்த ஒரு திருட்டுத்தனம் இன்று 3 பேரை நேர்மையில்லாதவர்களாக மாற்றியிருக்கிறது.

நம் நாட்டில் லஞ்சம், ஊழல் கூட இப்படி தான். ஆனால் "சார் 200ரூ தப்பிச்சது" என சொன்ன அந்த பெண்ணின் மகிழ்ச்சி என் குற்றஉணர்ச்சியை மட்டுபடுத்தியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக