எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 19 மே, 2018

சகட யோகம் நன்மையா தீமையா?

சகட யோகம் என்பது சந்திரனுக்கு 6, 8, 12-ல் குரு இருப்பதால் உண்டாகும் யோகம் என்ற ஒரு கருத்து உள்ளது. உண்மையில், குருவிற்கு 6, 8, 12-ல் சந்திரன் இருப்பதே சகட யோகம் என்று நமது மூல நூல்கள் குறிப்பிடுகின்றன.
சகடம் என்றால் சக்கரம் என்ற பொருளில் இந்த யோகம் இருப்பவர் வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வரும் என்று இதற்கு பொருள் சொல்லப் படுகிறது.
எனது  நீண்ட ஜோதிட ஆய்வில் இந்த யோகம் இருக்கும் பலர் நிரந்தரமான உயர்வான நிலையிலோ, அல்லது எப்போதும்  கஷ்டப் படுபவர்களாகவோ இருப்பதைப் பார்த்திருக்கிறேன். மேலும் உயர்வு, தாழ்வு என்பது ஒரு மனிதனின் தசா, புக்தி அமைப்பைப் பொருத்தது. இதுபோல கிரக யோக அமைப்பைச் சார்ந்தது அல்ல.
இந்த அமைப்பு இருந்தால் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வரும் என்பது இப்போது ஒத்து வரவில்லை. அந்தக் காலத்தில் இந்த யோகம் இருந்தவர்களின் நிலைமை இவ்வாறு இருந்திருக்கலாம். அல்லது ஜோதிடத்தில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என்று இடையில் சிலர் காட்டிய கைவண்ணமாக இது இருக்கலாம்.
இன்னும் ஒரு கருத்தாக நான் வலியுறுத்திச் சொல்லுவது, எந்த ஒரு யோகமாக இருந்தாலும் சம்பந்தபட்ட கிரகத்தின் நட்பு லக்னங்களுக்கு மட்டுமே முழுமையாக பலன் தரும் என்பதால் குருவின் யோகங்கள் அவரது நண்பர்களான சூரிய, சந்திர, செவ்வாய் ஆகியோரின் லக்னங்களுக்கே முழு பலன் அளிக்கும்.
சகட யோகம் என்பது நல்ல பலன்களைத் தராத ஒரு அமைப்பு என்பதால் சூரிய, சந்திர, செவ்வாயின் லக்னங்களான கடகம், சிம்மம், மேஷம், விருச்சிகம், மற்றும் குருவின் லக்னங்களான தனுசு, மீனம் ஆகியவைகளுக்கு கெடுபலன்களைத் தரும். அதேநேரத்தில் குருவின் எதிர் லக்னங்களான சுக்கிரன், புதன், சனியின் ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய லக்னங்களுக்கு குருவிற்கு
ஆறு, எட்டு, பனிரெண்டில் சந்திரன் இருக்கும் நிலையில் பாதிப்புகள் இருக்காது.
இன்னொரு விதிவிலக்காக குருவின் வீட்டில் சந்திரனோ, சந்திரனின் வீட்டில் குருவோ இருக்கும் நிலையிலும், குருவோ, சந்திரனோ ஆட்சி உச்சம் பெற்றிருக்கும் நிலையிலும், இந்த யோகம் அமையப் பெற்றால் அது ராஜ சகட யோகம் அல்லது கல்யாண சகட யோகம் என்று சொல்லப்பட்டு இதனால் கெடுபலன்கள் இல்லாமல் நல்ல பலன்கள் உண்டு என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக