எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 21 மே, 2018

கலைஞர், எம்ஜிஆர், ஜெயா.. அடுத்து ரஜினியா..? – ஜோதிடம் சொல்வதென்ன..? -Adhithya Guruji

.
ஒருவர் மக்களால் பெரிதும் மதிக்கப்படும் கவர்ச்சியாளராக இருப்பது வேறு. அனைத்து அதிகார அமைப்புகளும் அவரை வணங்கி சல்யூட் அடிக்கும் உச்ச பதவியில் இருப்பது என்பது வேறு. இரண்டிற்குமான கிரக அமைப்புகள் வேறு வேறானவை.



மிகப் பெரிய அதிகார பதவியை அடையப் போகிறவரின் ஜாதகத்தில் உன்னத ராஜயோக அமைப்புகள் இருக்கவேண்டும். அதோடு பதவி ஸ்தானம் என்று சொல்லப்படும் பத்தாம் பாவம் அவரது ஜாதகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் நாட்டிலோ, மாநிலத்திலோ உச்ச பதவியை அடைந்து, நீடித்தும் இருக்க முடியும்.


தமிழ்நாட்டின் முதன்மைப் பதவியில் நீண்டகாலம் இருந்த, முக்கியமாக சினிமாத் துறையைச் சார்ந்த, முந்தைய மூவரின் ஜாதகங்களைப் பார்க்கப் போவோமேயானால், கலைஞரின் ஜாதகத்தில் அவரது கடக லக்னத்திற்குரிய பத்திற்குடைய செவ்வாயும், ராசிக்கு பத்திற்குடைய சனியும் உச்சம்.

எம்ஜிஆருக்கு லக்னத்திற்கு பத்திற்குடைய புதன் பரிவர்த்தனையின் மூலம் ஆட்சி, ராசிக்குப் பத்திற்குடைய குருபகவானும் நேர்நிலையில் ஆட்சி. தனது குருவும், கட்சியின் பிதாமகருமான எம்ஜிஆரை விட சாதனைகளைச் செய்து மறைந்த ஜெயலலிதாவின் ஜாதகத்தில் லக்னத்திற்கு பத்திற்குடைய குரு ஆட்சியை விட மேம்பட்ட மூலத்திரிகோண வலுவில் இருக்கிறார். ராசிக்குப் பத்துக்குடைய சுக்கிரன் உச்சம்.


ஆனால் ரஜினியின் ஜாதகத்திலோ பதவியைக் குறிக்கும் கிரகமான ராசிக்கும், லக்னத்திற்கும் பத்திற்குடைய சுக்கிரன் ஆட்சியோ, உச்சமோ இல்லாமல் பகைவர் வீட்டில் அமர்ந்த நிலையில், லக்னத்திற்கு ஐந்திலும், ராசிக்குப் பனிரெண்டிலும் இருக்கிறார்.
கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற சுக்கிரன் தனது கேந்திர வீட்டிற்கு எட்டில் மறைந்து, சுபத்துவம் பெற்ற ராகு,கேதுக்களுக்கு பத்தாமிடத்தில் இருக்கும் காரணத்தினால் ரஜினி சுக்கிரனின் துறையான சினிமாவில் உச்ச நிலையில் இருக்கிறார். ஆனால் இதே விதி அரசியலின் உயர்நிலையான முதல்வர் பதவிக்குப் பொருந்தாது.

அரசனுக்கு நிகரான முதல்வர் பதவியில் அமரப் போகிறவரின் ஜாதகத்தில் வேத ஜோதிடத்தில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் குறிப்பிட்டுச் சொல்லும் ராஜயோகங்களும் இன்னும் சில முன்னிலை யோகங்களும் இருக்க வேண்டும்.

எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் ஜாதக யோகங்களை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். இருப்பினும் இப்போது எடுத்துக் கொண்ட தலைப்பிற்காக அவற்றைச் சுருக்கமாகச் சொல்கிறேன்.

கலைஞரும், ஜெயலலிதாவும் ஒரு மேம்பட்ட பிறவி அரச நிலையைக் கொண்ட உன்னத ஜாதக அமைப்பைக் கொண்டவர்கள். இவர்கள் இருவரின் ஜாதகத்தை ஒப்பு நோக்கும்போது எம்ஜிஆரின் ஜாதகம் ஒரு மாற்றுக் குறைந்ததுதான்.

வேதஜோதிடத்தில் ஓரளவுக்கு அனுபவம் உள்ளவர்களுக்கு இப்போது நான் சொல்லப் போகும் இந்த வித்தியாசங்கள் புரியும். இம்மூவரின் வாழ்க்கை அமைப்புகளும் இந்த வித்தியாசத்தை நன்கு உணர்த்தும்.

தனது நாற்பத்தி ஐந்து வயதில் முதல்வரானவர் கலைஞர். நாற்பத்தி மூன்று வயதில் அந்தப் பதவியில் அமர்ந்தவர் ஜெயலலிதா. கலைஞரை விட வயதில் மூத்தவரான எம்ஜிஆர், இவர்கள் பதவியில் அமர்ந்த வயதுகளில் தொழில் போராட்டங்களில் இருந்தார், அறுபத்தியொரு வயதில்தான் அவரால் முதல்வராக முடிந்தது.
கலைஞரின் ஜாதகம் ராஜயோகங்களில் முதன்மையானது. ஒருவரை முதல்நிலை தலைவனாக்கும் சிவராஜ யோகம் அவரது ஜாதகத்தில் இருக்கிறது. தலைமை தாங்க வைக்கும் கிரகமான சூரியனை வலுப் பெற்ற குரு நேருக்கு நேர் பார்ப்பதால் உண்டாகும் ராஜயோகம் இது.

இது தவிர பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான கேந்திரங்களில் செவ்வாய் உச்சமடைவதால் உண்டாகும் ருசக யோகம், பங்கமடைந்த சனி உச்ச சச யோகம், ஒன்பது பத்துக்குடையவர்கள் பூரண வலுப் பெற்றதால் உண்டான மிக உன்னத தர்ம,கர்மாதிபதி யோகம் என ஒரு யோகக் குவியல் அவருடைய ஜாதகம். இதுபோதாதென்று அவரது லக்னம், ராசி, லக்னாதிபதி சந்திரன் மூன்றும் வலுப் பெற்ற குருவால் பார்க்கப்பட்டு, லக்ன நாயகனும் உச்சத்திற்கு அருகில் இருக்கிறார்.

ஜெயலலிதாவின் ஜாதகமும் கலைஞரின் ஜாதகத்திற்கு கொஞ்சமும் சளைத்ததல்ல. “மகம் ஜெகத்தை ஆளும்” என்ற ஜோதிடமொழிப்படி மாசி மகம் அன்று பூரணச் சந்திரனாகி, குருவால் பார்க்கப்பட்ட பவுர்ணமி யோகத்தோடு உண்டான முதன்மை ராஜயோகம் அமைந்த ஜாதகம் அவருடையது.

இதுவன்றி இயற்கைச் சுப கிரகங்களான குரு, சுக்கிரன் இருவரும் வலுவுடன் கேந்திரங்களில் அமர்ந்ததால் உண்டான ஹம்ச யோகமும், மாளவ்ய யோகமும் அவருக்கு இருந்தது. கலைஞரைப் போலவே லக்னத்தையும், ராசியையும் வலுப் பெற்ற குரு பார்க்கிறார்,

எம்ஜிஆரின் ஜாதகப்படியும் குருபகவான் ஆட்சி பெற்றதால் உண்டான ஹம்ச யோகமும், சுக்கிரனும், புதனும் இணைந்ததால் உண்டாகும் தர்ம கர்மாதிபதி யோகமும் இருக்கின்றன. லக்னாதிபதி பரிவர்த்தனையின் மூலம் ஆட்சி பெற்ற நிலையுண்டாகிறார். எல்லாவற்றையும் விட மேலாக ஒன்பது, பத்துக் குடையவர்களுடன் இணைந்த ராஜயோக மகர ராகுவின் தசை எம்ஜிஆருக்கு முதல்வர் பதவியை பெற்றுத் தந்து முதல்வராகவே மண்ணுலகை விட்டு மறையச் செய்தது.

ஆனால் இது போன்ற ராஜயோகங்கள் எதுவுமே இல்லாத சாதாரண ஜாதகம் ரஜினியுடையது. ஜாதகப்படி அவருக்கு சிம்மலக்னம், மகர ராசியாகி ராஜகிரகங்கள் என்று சொல்லப்படக்கூடிய சூரியனும், சந்திரனும் நான்கு மற்றும் ஆறாமிடங்களில் அமர்ந்திருக்கிறார்கள். இதில் சூரியன் திக்பலம் இழந்து சனியால் பார்க்கப்படுகிறார்.

எம்ஜிஆருக்கும் இந்த அமைப்பு இருந்தது. ஆனால் வலுப்பெற்ற லக்னாதிபதியும், ராஜ யோக ராகு தசையும் அதனை ஈடுகட்டியது.
அதிகாரத்தைக் குறிக்கும் செவ்வாய் உச்சம் பெற்று, வளர்பிறைச் சந்திரனுடன் இணைந்திருப்பதை வேண்டுமானால் ரஜினியின் ஜாதகத்தில் சினிமாவைத் தாண்டிய சிறப்பாகச் சொல்லலாம். ஆனால் அதுவும் ருசக யோகம் போன்று கேந்திரங்களில் இல்லாமல் ஆறில் மறைந்துதான் உண்டாகிறது. இந்த அமைப்பு பூமியை வாங்க வேண்டுமானால் உபயோகப்படுமே தவிர பூமியை ஆள அல்ல.

ஒருவர் முதல்வர், பிரதமர் போன்ற பதவியை அடைய வேண்டுமானால் சூரியனோ, சந்திரனோ தங்களுக்கு கேந்திரமாகவோ அல்லது லக்ன கேந்திரமாகவோ இருக்க வேண்டும் என்பது முக்கிய ஜோதிடவிதி. இந்த அமைப்பு இல்லாவிடில் வலுப்பெற்ற ராஜயோகங்கள் இருக்கவேண்டும்.

இதுவன்றி சிம்மம் மட்டும் வலுப் பெற்றிருந்தால் அவர் ஒரு மறைமுகமான அதிகாரத்துடன் அதாவது அரசாங்கத்தில் அவர் சொல்லும் எதுவும் நடக்கும் என்கிற தோரணையில், மகனை அரியணையில் அமர்த்தி பின்னால் இருந்து ஆலோசனைகளை சொல்லி நிர்வாகத்தை நடத்தும் ஒரு முதிய அரசனைப் போலத்தான் இருக்க முடியும். நேரடி பதவியில் இருக்க முடியாது.

இன்னொரு நிலையாக ஒரு மனிதனின் வாழ்வில் நடைபெறும் தசா,புக்திகளும், அவ்வப்போது மாறும் கோட்சார அமைப்புகளும், அவனது வாழ்க்கை அமைவுக்கு மிகவும் முக்கியமானது. இன்னும் சொல்லப் போனால் ஜாதகம் யோகமாக இருந்தாலும் தசா, புக்தி அமைப்புகளே ஒரு மனிதனை ஒரு உயர்வுக்கோ, அல்லது தாழ்வுக்கோ கொண்டு செல்கின்றன.

ராகு தசையில் கண்டக்டராக இருந்த ரஜினி, தனது ஜாதகப்படி ராசிக்கும், லக்னத்திற்கும் பத்தாம் அதிபதி சுக்கிரனின் துறையான சினிமாவின் மேல் ஆர்வம் கொண்டு சென்னைக்கு வந்து திரைப்படத் துறையில் நுழைந்தார். அதன் பிறகு லக்னத்திற்கு கேந்திரத்தில் அமர்ந்த ராகு சாரம் பெற்ற குருவின் தசையில் உச்ச நட்சத்திரமானார். லக்னாதிபதியின் சாரமும், சூட்சும வலுவும் பெற்ற ராசிநாதன் சனியின் தசையில் சிகரம் தொட்டார்.
அடுத்து இரண்டாம் அதிபதியான புதனின் தசை ரஜினிக்கு நடக்க இருக்கிறது. சிம்ம லக்னத்திற்கு புதன் யோகர் அல்ல. அவர் ராசிக்கு ஆறாம் அதிபதியாகி ராசியின் ஆறாம் வீட்டையே பார்க்கிறார். இன்னும் சொல்லப் போனால் இந்த தசை ரஜினிக்கு மாரக தசையாகவே செயல்படும்.

மேலும் மிக முக்கியமான இந்த காலகட்டத்தில் ரஜினியின் மகர ராசிக்கு வருகின்ற சனிப்பெயர்ச்சி முதல் ஏழரைச்சனி ஆரம்பிக்க இருக்கிறது. அறுபது வயதை அவர் கடந்து விட்டதால் இந்த ஏழரைச்சனி அவரை ஒன்றும் செய்யாது என்று சொல்லலாம். ஆனாலும் சனி, சனிதான் என்பதை நான் அடிக்கடி கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறேன்.

ஏற்கனவே ஜெயலலிதாவின் ஜாதகத்தை பற்றி எழுதும் போது 1996-ல் அவருக்கு அஷ்டமச்சனி நடந்து கொண்டிருந்த போதும், 2006 ல் ஏழரைச்சனி நடந்தபோதும் அவர் ஆட்சியை இழந்ததை குறிப்பிட்டிருக்கிறேன். அதேபோல 2001-ல் கலைஞர் ஆட்சியை இழந்த போது அவருக்கு ஏழரைச்சனி நடந்து கொண்டிருந்தது.
எனவே ஏழரைச்சனி, அஷ்டமச்சனி காலங்களில் ராஜயோக ஜாதகமாயினும் இருக்கும் ஆட்சியை இழக்கத்தான் வைக்குமே தவிர ஆட்சியைப் பிடிக்கச் செய்யாது. எனவே இனிமேல் நடைபெறப் போகும் கோட்சார அமைப்புகளும் ரஜினிக்கு சாதகமாக இல்லை.

நேற்று ரஜினி பேசும்போது போர் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார். யுத்தம் என்னவோ ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை வந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் “மன்னன்” தான் அதைச் சந்திக்க ஆயுளுக்கும் தயாராக இல்லை.-Adhithya Guruji

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக