எனக்கு தெரிந்த ஒருவருடைய மகள் இப்போது 7ம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு அவ்வப்போது வீசிங்க் பிரச்சனை இருந்து வந்துள்ளது.அதற்கு அவர்கள் மருத்துவம் பார்த்து மருந்துகள் கொடுத்து வந்துள்ளனர்.
5ம் வகுப்பு வரை 80 முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண்கள் வாங்கி வந்த அவள் கொஞ்சம் கொஞ்சமாக சரிய ஆரம்பிக்கிறாள். 70 சதவீதம் 60 சதவீதம் என குறைகிறது.
அவளது தந்தை , எப்பவும் 90 எடுக்க முடியுமா , குழந்தைதானே டேக் இட் ஈஸி என மகளைத் திட்டும் மனைவியை அடக்குகிறார்.
ஒரு கட்டத்தில் ஒன்றிரண்டு பாடங்களில் ஃபெயில் ஆகிறாள்.நீ கொஞ்சம் பொண்ணுக்கு ஒழுங்கா சொல்லிக்கொடு என்று மனைவியைத் திட்டுகிறார் அப்பா.
குழந்தை பள்ளியில் இருக்கும்போது தந்தைக்கு ஒரு போன்கால் வருகிறது. குழந்தை மயக்கம் அடித்து விழுந்து விட்டாள். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம் என அழைத்துச் செல்கிறார்கள். மருந்துகள் கொடுக்கப்பட்டு வைத்தியம் பார்த்ததும் வீட்டுக்கு வருகிறாள்.
இது நடந்து சில நாட்களிலேயே மீண்டும் வகுப்பில் மயக்கம் அடித்து விழுகிறாள். மீண்டும் அரசு மருத்துவமனை. அது ஒரு சின்ன டவுன் தான். இந்த முறை தலைமை நர்ஸ் , குழந்தையின் அப்பாவுடன் பேச வேண்டும் என்கிறார்.அப்பாவும் சென்று பேசுகிறார்.
“இவளுக்கு என்னென்ன பிரச்சனை ?”
“வீசிங்க் இருக்கு. மருந்து குடுத்துட்டு இருக்கோம்”
“இவளுக்கு ஃபிரண்ட்ஸ் இருக்காங்களா “
“தெரியலீங்களே”
“வீட்ல நீங்களும் மனைவியும் சண்டை போடுவீங்களா”
“அப்பப்ப போடுவோம்”
“நீங்க உங்க பொண்ணு கூட நேரம் செலவழிப்பீங்களா ? பேசுவீங்களா”
“சும்மா அப்பப்ப பேசுவேன்”
“உங்க பொண்ணுக்கு வீசிங்க் பிரச்சனையே இல்லீங்க. மயக்கம் போடறதும் பிஸிக்கலா எந்த சிக்கலும் இல்லை. நீங்க , குடும்பம் அவளை கண்டுக்காம இருக்கறதும் , அவ கூட யாரும் நேரம் செலவழிக்காம இருப்பதும் தான் பிரச்சனை. நீங்களும் மனைவியும் அடிக்கடி சண்டை போட்டுட்டு இருந்ததும் அவளை கடுமையா பாதிச்சி இருக்கு. உடனடியா அவளை கேரிங்கா பார்த்துக்கோங்க. ஒரு சைக்ரியாட்டிஸ்டை போய் முதல்ல பாருங்க” என்று அந்த அரசு மருத்துவமனை நர்ஸ் கூறி இருக்கிறார்.
முதலில் தந்தை பள்ளியில் சென்று விசாரித்து இருக்கிறார். குழந்தை யாருடனும் பழகுவதில்லை என்று தெரிய வந்திருக்கிறது. மிஸ் இடம் பேசி இருக்கிறார். முன்ன ஒழுங்கா படிச்சிட்டு இருந்தா , கொஞ்ச நாளா ஒரு மாதிரிதான் இருக்கா என்று சொல்லியிருக்கிறார்கள்.
முதலில் மனைவியுடன் சண்டை போடுவதை நிறுத்தியிருக்கிறார். மகளுக்கு ஒரு சைக்கிள் வாங்கி கொடுத்து ஓட்ட கற்றுக்கொடுத்து இருக்கிறார். குறுகிய காலத்திலே சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டாள்.
குறைந்தது ஒரு மணி நேரம் அவளுடன் பேசுவது , கதை சொல்வது , பள்ளியில் என்ன நடந்தது என பேசிக்கொண்டு இருப்பது , வெவ்வேறு பொழுது போக்குகளை அறிமுகப்படுத்துவது , சில விளையாட்டுக்கள் கற்றுக்கொடுப்பது என சில நாட்கள் ஓடி இருக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி , வீசிங்க் பிரச்சனை முதலில் முடிவுக்கு வந்திருக்கிறது. மயக்கம் போடுதல் எல்லாம் இல்லை. மீண்டும் 90 சதவீதம் மார்க் எடுக்க ஆரம்பித்து விட்டாள்.ரோபோடிக்ஸ் போட்டியில் முதலாவதாக வென்று (பள்ளி அளவில்) இருக்கிறாள். இப்போது அவளே மற்ற குழந்தைகளுடன் சென்று பேசுகிறாள். நிறைய ஃபிரண்ட்ஸ் கிடைத்து விட்டனர்.
பொதுவாக பெண்கள் மாதமாக இருக்கும்போது , மெனோபாஸ் சமயத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் மனப் பிரச்சனைகளை மட்டுமே நாம் பேசி வந்திருக்கிறோம்.அல்லது அந்த பெண்களால் அதை வெளியே சொல்லத் தெரிந்து அதை ஒரு பேசு பொருளாக்க முடிந்து இருக்கிறது.
பெண் குழந்தைகள் வயதுக்கு வருவதற்கு முன்கூட்டிய கால கட்டத்திலும் அவர்களுக்கு சில மனக் குழப்பங்கள் , தேவையற்ற அச்சங்கள் என ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த கால கட்டத்தில் வீட்டில் நடக்கும் சண்டைகள் , அந்த பெண் குழந்தையை கண்டு கொள்ளாமல் இருத்தல் , நேரம் செலவிடாமல் இருத்தல் எல்லாம் இதைபோன்ற மனோரீதியான பாதிப்பை உண்டாக்கி உடல் ரீதியான பாதிப்பாக வெளிப்படுகிறது என்று நினைக்கிறேன்.
இல்லையே , நான் அவளுக்கு தேவையானதை வாங்கி கொடுத்துடறேன், வருஷம் ஒரு டூர் கூட்டி போறேன். ஷாபிங்க் கூட்டிட்டு போறேன் என டக்கென பலரும் சொல்ல முயற்சிப்பார்கள். ஆனால் விஷயம் அதுவல்ல ! அவளுடன் எவ்வளவு “குவாலிட்டியான” நேரம் செலவிடுகிறீர்கள் என்பது முக்கியம். அவளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள் என்பது முக்கியம்.
45 வயது தடி மாடுகளே ,என்னை கேரிங்க்கா பாத்துப்பியா என தளுக்காக கொஞ்சிக்கொண்டு இருக்கும்போது, உண்மையான சிறுமி எவ்வளவு ஏங்குவாள் கேரிங்குக்காக !
பெண் குழந்தைகள் பொதுவாக அம்மாவிடம் எல்லாவற்றையும் பேச மாட்டார்கள். அதிலும் டீன் ஏஜில் அம்மா மீது ஒரு வெறுப்பு வரும். அம்மாக்களும் டீன் ஏஜ் மகளை ஒரு சுமாரான எதிரி போலவே நடத்துவார்கள். அப்போது மகள்களுக்கு இருக்கும் ஒரே புகலிடம் அப்பா மட்டுமே. அப்பாவும் தூரமாக இருந்தால் , அணுகக் கூடியவராக இல்லாமல் இருந்தால் , மனம் விட்டு அப்பாவுடன் பேச நேரம் கிடைக்க வில்லை என்றால் , அப்பா நம்மை அரவணைத்துக்கொள்ளவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டால், மனரீதியான பாதிப்பு கண்டிப்பாக வரும். என்ன கொடுமை எனில் அதை அவர்களால் வெளியே சொல்லத் தெரியாது.
சில சிறுமிகள் , குடும்பத்தின் இந்த விலகலால்தான் , மெக்கானிக் , ஆட்டோ டிரைவர் , பஸ் கண்டக்டர் , லோக்கல் ரௌடி என சுலபமாக அணுகக் கூடியவர்களுடன் ஓடிப்போவது நடக்கிறது. இவர்கள் காதலாலோ , காமத்தாலோ ஓடிப்போவது இல்லை. ஒரு அரவணைப்புக்காக , அன்புக்காக ஓடிப்போகிறார்கள். ஆனால் அவர்கள் சீரழிக்கப்படுகிறார்கள். பெரு நகரங்களில் இது நடப்பதில்லையா அல்லது வெளியே தெரிவதில்லையா என்பது தெரியவில்லை. ஆனால் சிற்றுர்களில் 9வது , 10 வது , 11 வது படிக்கும் சிறுமிகள் சம்மந்தம் இல்லா ஆட்களுடன் ஓடிப்போவது சகஜம்.
அப்பாக்களுக்கு :-
என்னதான் செய்தாலும் மனைவியை திருப்திப்படுத்த முடியாது. போலவே , காதலிகளையும் , கள்ளக் காதலிகளையும்.
கரியர் பிரச்சனை , பொருளாதார பிரச்சனை என என்னதான் சாக்கு சொன்னாலும் , குடிப்பதையும் , நண்பர்களுடன் கூத்தடிப்பதையும் , நள்ளிரவு சாட் செய்வதையும் , ஃபிளிர்ட் செய்வதையும் , டேட்டிங்க் ஆப்பில் பிஸியாக இருப்பதையும் , காதலிகள் மாற்றிக்கொண்டே இருப்பதிலும் , மீண்டும் மீண்டும் காதலுக்கு ஏங்கி(மேட்டர்தான் , டீஸண்டா சொன்னேன்) தேடிக்கொண்டே இருப்பதிலும் பிஸியாகத்தானே இருக்கிறீர்கள் ? இதற்கெல்லாம் நேரம் கிடைக்கிறது அல்லவா ?
எந்த காதலும் இப்போது டார்ச்சர்தான் செய்யும். அதுதான் இப்போதைய டிசைன். மெண்டலாக்கும் பித்துக்குளியாக்கும் , கரியரை கெடுக்கும். எந்த காதலியாக இருந்தாலும் , அன்பு காதலைத் தவிர மற்ற அனைத்தையும் உங்களுக்கு கொடுப்பாள். இது அவள் குற்றமல்ல. நவீன வாழ்வின் வெளிப்பாடு. இப்போது எல்லாமே சுயநலம் மற்றும் தான் தான் என்று தன்னை மட்டுமே முன்னிலைப் படுத்தி நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது அனைத்து காதலர்களுக்கும் தேவை ஒரு அடிமை. ஒருவரை ஒருவர் டார்ச்சர் செய்து சண்டை போட்டு , சோகமாகி அழுது புலம்புவது ஒரு ஹாபி. அது அனைவருக்கும் பிடித்து இருக்கிறது.
இப்படி ஒரு பைத்தியக்கார உலகத்திற்குள் போய் மாட்டுவதை விட கொஞ்ச நாளைக்கு மனைவிக்கு மட்டும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டு , அவள் எது சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டிக்கொண்டு இருந்தால் , பவித்ரமான , அழகான அன்பு மகளிடம் கொட்டிக்கிடப்பது உங்களுக்கு கிடைக்கும்.
மகளின் அன்பு அது இது என ரொமாண்டிசைஸ் செய்வதில் விருப்பம் இல்லையா ?
சரி அதை விடுங்கள். உங்களின் கடமை என்று ஒன்று இருக்கிறது அல்லவா ?
மகள் டீன் ஏஜ் பருவத்தில் அடி வைக்கும் தருணத்தில் இருந்து , வயதுக்கு வரும் நேரம் , அதற்கு பிறகான சில வருடங்களுக்கு அவளுக்கு அப்பாவின் அரவணைப்பும் , கேரிங்கும் தேவை. அதை அவளுக்கு அளிப்பது உங்கள் கடமை.
நான்கைந்து வருடங்கள் அவளுக்காக தினமும் சில மணி நேரங்களை அவளுடன் கழித்து , அன்பாகவும் , பாதுகாப்பாகவும் , தோழனாகவும் இருந்து விட்டு , அவளுக்கு மெச்சூரிட்டி வந்து , அவளுக்கு ஒரு பாய் ஃபிரண்டு கிடைத்த வுடன் நீங்கள் எங்காவது ஊர் மேயப் போகலாம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக