என்ன ஆச்சி இவளுக்கு..? ஒண்ணும் புரியல எனக்கு.
காலையில நான் வேலைக்கி போறப்ப கூட வாசல் வரைக்கும் வந்து வழியனுப்பி ‘வர்றப்ப சாந்தியக்கா கடையில பூ வேங்கிட்டு வாங்க.. அவங்கதான் நல்ல நெருக்கமா கட்டிருப்பாங்க..’ன்னு சொல்லி , ப்ரியா வாரியார் மாதிரி கண்சிமிட்டி , விரலால சுட்டாளே..
”ஒன்ன நெனைச்சிக்கிட்டே பைக் ஓட்டி சிக்னல்ல யெல்லோ லைன தாண்டி நிப்பாட்டி , பின்னாடி வர்றதுக்காக ரிவர்ஸ் கியர தேடி அசடு வழிஞ்சேன் டிராஃபிக் கான்ஸ்டபிள்கிட்ட..”ன்னு ஃபோன்ல சொன்னப்ப அவ சிரிச்ச சிரிப்பு , சாயங்காலம் வாங்கப்போற மல்லிய ஞாபகப் படுத்திச்சி.
வாழை இலையில சாந்தியக்கா பொதிஞ்சி குடுத்த பூவ , காலி டிஃபன் பாக்ஸுக்குள்ள வச்சி கொண்டு போயி குடுப்பேன். ஜாமெண்ட்ரி பாக்ஸ பல்லால திறந்து நெல்லிக்காய கடிச்ச ரெட்டச் சடை பருவத்த கண்ணுல காட்டுவா.
வழக்கமா ஓடுற படந்தான். இன்னிக்கி எந்த இடத்துல ரீல் அறுந்துச்சின்னு தெரியல. தூக்கி வச்ச முகத்தோட நங்குன்னு அவ கொண்டு வந்து வச்ச காஃபி , ஃபிகாவா கலங்கிடிச்சி.
‘டேய் பெரியவனே.. ஒங்க அத்தாவுக்கு நைட்டுக்கு தோச வேணுமா , சப்பாத்தி வேணுமான்னு கேட்டு சொல்லுடா..’
கல்யாணமாகி ஒரு வருஷமாச்சி. மூணு மாச புள்ளைய பெரியவனேன்னுதான் கூப்டுவா. பட்டுன்னு அடுத்த புள்ள வேணும்ங்குறத ஒத்த வார்த்தையில சொல்லிடுற ரசனைக்காரி. தோசையா , சப்பாத்தியான்னு எங்கிட்ட கேக்க வேண்டியத , தொட்டில ஈரம் பண்ணுறவங்கிட்ட கேக்குறாளே.. சுர்ர்ர்ருன்னு ஏறிச்சி
எனக்கு.
“ஏய் லூஸு..இதென்ன ஜாடமாடையா பேசுற புதுப் பழக்கம்..? ”
‘எது.. புதுசு புதுசா பேசுற பழக்கம் எனக்கா , ஒங்களுக்கா.?’
குரல் உடைஞ்சி போயி அவ கண்ணு கலங்குனது தெரிஞ்சிது. ஒரு வருஷத்துல இதுதான் முதல்தடவை.
பதறிட்டேன். எந்திச்சிப்போயி “என்னம்மா.. நா என்ன பேசுனேன்..? நெஜம்மா எனக்கு ஞாபக..”
‘டேய் சின்னவனே.. இங்க வாடா..’
முன்னறையிலேயிருந்து அம்மாவோட குரல் கேட்டிச்சி. எதுக்குன்னு புரியாம இவள திரும்பி பாத்துக்கிட்டே போனேன். அத்தா குர்ஆன் ஓதிக்கிட்டிருக்க , அம்மா பக்கத்துல போயி உக்காந்தேன். அம்மா பாதி குடிச்சிட்டு வச்சிருந்த காப்பி பக்கத்துல இருந்திச்சி. எடுத்து ஒரு மடக்கு குடிச்சேன். கடைசி உருண்டைய வாங்க நான் மறுக்க , அம்மா தன் வாய்க்குள்ள போட்ருக்கலாம் நாப்பது வருஷங்களுக்கு முன்னாடியான ஒரு நிலாச்சோறு இரவுல.
“என்னம்மா..”ன்னேன்.
‘நானும் கவனிச்சிட்டுதான்டா இருந்தேன்.. நீ அப்டி பேசிருக்கக் கூடாது..’ன்னாங்க.
பகீர்னுது எனக்கு.
“என்னம்மா சொல்லுதீங்க.. எனக்கு புரியல..”
‘நாம பேசுற சின்னச்சின்ன வார்த்தைகளுக்கும் அர்த்தம் இருக்குடா.. அதுவும் கணவன் , மனைவி உறவுக்குள்ள பேசுறப்ப ஒவ்வொரு வார்த்தைக்கும்..’
“இதுக்கு அவளே பரவாயில்ல போல.. கொஞ்சம் புரியும்படியா பேசுங்கம்மா..”
‘ஒங்களுக்கு கல்யாணமாகி இந்த ஒரு வருஷத்துல ,
எங்களப்பத்தி அவகிட்ட பேசுறப்ப மாமா , மாமின்னுதான் சொல்லுவ. மாமாவுக்கு லுஹர் தொழுதுட்டு வந்ததும் சாப்பாட்ட குடு , மாமிக்கி மாத்திரைய எடுத்துக் குடுத்தியான்னு தான் கேப்ப. கணவன் தன்னோட பக்கம் நின்னு உறவுகள சொல்லுறதுல ஒரு மனைவிக்கி பேரானந்தம் கிடைக்கும்டா. புகுந்த வீட்டுல தனக்கான சின்னச் சின்ன உரிமைகளக்கூட எந்தப் பொண்ணும் விட்டுக் குடுக்க மாட்டா.
அதெல்லாம் பொம்பளைகளுக்குத்தான் புரியும். இன்னிக்கி நீ வேலைய விட்டு வந்ததும் அவகிட்ட ‘எங்க அத்தா , அம்மாவுக்கு காப்பி குடுத்தியா’ன்னு கேட்டுக்கிட்டே குளிக்கப் போன. நீ சொல்லித்தான் அவ தரணும்னு இல்ல , பெத்த மக மாதிரி எங்கள கவனிச்சிக்குறா. அது ஒனக்கும் தெரியும்.ஆனாலும் எங்க அத்தா , அம்மான்னு நீ சொன்னத காதுல கேட்டதும் எங்களுக்கும் பக்குன்னுதான் ஆச்சிடா..’
“அச்சச்சோ அம்மா.. வேலையிலேருந்து வந்த களைப்பில நா ஏதோ..”
ஓதிட்டிருந்த குர்ஆன மூடி வச்சிட்டு , ‘ஒனக்கு ஞாபகம் இருக்காடா.. ஒங்களுக்கு கல்யாணமான புதுசுல , சம்பந்தியம்மா அவளுக்கு ஃபோன் போட்டு ஒன்னோட கல்யாணத்துக்கு வரமுடியாத நம்ம டெல்லி மாமா குடும்பம் நாளைக்கி நம்ம வீட்டுக்கு வர்றாங்க ,
நீயும் மருமகனும் வாங்களேன்னு கூப்ட்டப்ப , டெல்லி மாமா நம்ம வீட்டுக்கு வர்றதவிட இங்க எங்க வீட்டுக்கு வர்றதுதாம்மா சரி. எங்க வீட்டையும் எங்க மாமா , மாமியையும் பாத்தமாதிரி இருக்கும்லோன்னு சொன்னவடா..’ன்னு அத்தா சொன்னதும் என்னோட தப்பு புரிஞ்சிது.
அறிவுரையில ரெண்டு வகை இருக்கு. பொளேர்னு செவுட்ல அறைஞ்சி தலையில குட்டி சொல்றது முதல்வகை. மயிலிறகால வருடிக் கொடுத்து சொல்றது ரெண்டாவது வகை. நிமிந்து பாத்தேன். அத்தா , அம்மா ரெண்டுபேர் கையிலேயும் மயிலிறகுகள் இருந்திச்சி.
எந்திச்சி கைலிய சரிபண்ணிக்கிட்டே ஹாலுக்கு வந்தேன். பெட்ரூம்ல அவ இருக்குறது தெரிஞ்சிது. சேலை முந்தானையோட நுனிய ரெண்டு கைகளாலேயும் வெடுக் வெடுக்குன்னு பிடுங்குற அழகு , நா கோவமா இருக்கேன்னு சொல்லாம சொல்லிச்சி.
நெருங்கி வந்து ரெண்டு கைகளாலேயும் அவ மொகத்த ஏந்தி “மன்னிச்சிக்கடா குட்டா.. என்னமோ கவனக்குறைவா அப்டி பேசிட்டேன் கண்ணா..”ன்னேன்.
முந்தானை வெடுக் பிடுங்கலோட வேகம் குறைஞ்சிது.
மன்னிப்பு கேக்குறதுக்காகவே பிரத்யேகமா சில வார்த்தைக் கொஞ்சல்கள சேமிச்சி வச்சிருக்கணும். மறந்துபோயிக்கூட சாதாரண சமயங்கள்ல அந்த வார்த்தைகள உபயோகப்படுத்திடக் கூடாது.
“நேத்து நம்ம வீட்டுக்கு வந்த ஒன்னோட சின்னம்மாகிட்ட ‘எம்புள்ள அவ்ளோ அழகு’ன்னு நம்ம புள்ளையப்பத்தி நீ பெருமிதப்பட்டியே.. அப்ப நா ஏதாச்சும் சொன்னேனா லூஸு..’’
‘ஆமா.. அழகப்பத்தி பேசுறப்ப அவன் எம்புள்ளதான். ஒங்களுக்கும் அழகுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு..’ன்னு அவ சொன்னப்ப , சமாதானமாகிட்டேன்டான்னு சொல்லாம சொல்லிச்சி , அவ கன்னக் கதுப்புகளோட குறும்புச் சிரிப்பு.
திமிறுனவள இறுக்க்க்கி அணைச்சி , அந்த காது மடல்கள கடிக்கிறப்பதான் எவ்ளோ சுகம்..!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக