மட்டன்/சிக்கன் கொத்துக்கறி புரோட்டா, பர்மா புரோட்டா, பன் புரோட்டோ, க்ரேப் புரோட்டா, கேக் புரோட்டா, பர்கர் புரோட்டா, முட்டை வீச்சு, சாண்ட்விச் புரோட்டா எனப் பல வகைகளில் கிடைக்கிறது.. ஆனால் அப்போது (1987) வீச்சு புரோட்டாவும் முட்டை புரோட்டா மட்டும் தான் புதுசு.. பெரிய கடைகளில் மட்டும் சிலோன் புரோட்டா கிடைக்கும்.. மதுரையில் தான் புரோட்டாவை அடித்துத் தருவதை..
முதன் முதலில் பார்த்தேன்.. வீரம் நிறைந்த ரவுடியிசம் தெறிக்கும் மதுரை மண்ணில் வன்முறை குறைந்ததற்கு புரோட்டாவும் ஒரு காரணம்..இருக்கும் கோபத்தை மாவு மீது காட்டி தங்கள் வெறியை தீர்த்துக் கொண்டனர்.. சிலர் மானசீகமாக தங்கள் மனைவியை நினைத்துக் கொண்டு அடிக்க பஞ்சு பஞ்சாக உதிர்ந்த புரோட்டா ருசிக்கப்பட்டு எங்கள் நெஞ்சமெங்கும் நிறைந்தது.!
16 வயதிற்கு மேல் இளந்தாரிகள் மதுரை ஸ்டைலில் கைலி அணிந்து அதாவது கைலியை தூக்கி டப்பா கட்டு கட்டாமல் ஒரு மாதிரி லைட்டாக இருபுறமும் மேலேற்றி முன்புறம் முடிச்சு போட்ட ஸ்டைல்.! முக்கால் கால் தெரிய கைலி கட்டும் ஸ்டைல் அது.. இப்படி ஒரு நாலு பேரு அண்ணே 4 பரோட்டா பிச்சு போட்டு ஒரு ஆப்பாயில் என கேட்பது இன்றைய KFCயின் மினி பக்கெட் சிக்கன் காம்போ ஆர்டர்..
தருவதற்கு ஈடாக இருக்கும்.! அதிக பட்சம் 4 பரோட்டா ஒரு ஆம்லேட் 5 ரூபாய் தான்.! ஜெய்ஹிந்துபுரத்து சமய சஞ்சீவி, தல்லா குளம் ஆறுமுகம் கடை, புதூர் புரோட்டா கடை, நாராயணபுரம் கார்த்தி கடை, பீபி குளம் சார்லஸ், யானைக்கல் பரமேஸ்வரி, ஆரப்பாளையம் மூக்கன்/ மாரியப்பன் கடை, பைக்காரா சந்திரன் கடை, செல்லூர் மோகன் கடை, க்ளாஸ்கார தெரு ரோஜா கடை.. கோரிப்பாளையம் அமீர் மஹால்..
இப்படி புரோட்டாவில் ஜாம்பவான்கள் இருந்த காலம் அது! கடையின் புரோட்டாவிற்கு இவர்கள் தரும் பிரத்யேக சால்னா தான் இவர்களின் அடையாளம்.! சிலர் 3 சால்னாக்கள் தர ஆரம்பித்தனர்.. அதிலும் சமய சஞ்சீவியில் சுக்கா வறுவலின் எண்ணை க்ரேவி, ஈரல் குழம்பு, சிக்கன் குழம்பு, மூளை ரோஸ்ட் க்ரேவின்னு வித விதமாக கொடுப்பார்.!சில முனியாண்டி விலாஸ்களிலும் இது போல வெரைட்டி கிடைக்கும்!
1990 களில் வசந்தநகரில் ஆரம்பிக்கப்பட்ட தமிழன் புரோட்டாக் கடை அதில் ஒன்று.. ஒரே மேட்சில் புகழடைந்து இந்தியா முழுவதும் பேசப்பட்ட தினேஷ் கார்த்திக் போல.. கடை ஆரம்பித்த அடுத்த நாளே கூட்டம் கட்டி ஏறியது.. காரணம் சால்னா.! தேங்காய், கசகசா, நிலக்கடலை, முந்திரி போட்டு அரைத்து வைக்கும் சால்னா.! அதன் மணமே உங்களை கவர்ந்திழுக்கும்.. புரோட்டாவும் அவ்வளவு சாஃப்ட்
புரோட்டா மாவில் 10 முட்டைகளை உடைத்து ஊற்றி பிசைவார்கள் ஓ நம்ம சாப்பிடுற சாதா புரோட்டாவே முட்டை புரோட்டா தானா என மக்களை நினைக்க வைத்தனர்.. அந்த முட்டை தான் புரோட்டாவின் மென்மைக்கு காரணம்.! பிறகடைகளில் 4 புரோட்டா சாப்பிடும் நபர் இங்கு நிச்சயம் 6 சாப்பிடுவார்.. அந்தளவு தரம் இருக்கும்.. இங்கு தான் ஷேரிங் முட்டை பரோட்டா அறிமுகமாகி பிரபலமானது.!
அதாவது அன்று முட்டை புரோட்டா பத்து ரூபாய்.. நீங்க 5 ரூபாய் தந்தால் ஆஃப் முட்டை பரோட்டா கிடைக்கும்.. இதெல்லாம் அவர்கள் கடையில் கூட்டத்தை அதிகப் படுத்தியது.. கலக்கி, வடியல், பொடிமாஸ், ஆம்லேட், ஆஃப்பாயில், ஃபுல்பாயில், ஒன் சைடு ஆம்லேட், கரண்டி ஆம்லேட், முக்கால் ஃபாயில் என முட்டைகள் தசாவாதாரம் எடுத்த பின்பு புரோட்டா சாப்பிடுவது இன்னுமொரு..
ரசனையான அனுபவமாக மாறியது.. முக்கால் ஃபாயில் என்பது ஆஃப்பாயிலை திருப்பிப் போட்டு சில விநாடிகளில் எடுத்து விட வேண்டும்.. மேலும் கீழும் முட்டை வெந்திருக்க நடுவில் உள்ள மஞ்சள் கரு மட்டும் பாதி வெந்து திரவமாக இருக்கும்.. புரோட்டாவை பிய்த்து இந்த கருவில் தொட்டு அப்படியே சால்னாவிலும் தொட்டு சாப்பிடும் சுகம் இருக்கிறதே அடடா அதெல்லாம் காமத்தை விட இன்பம்.!
ஆரப்பாளையம் மாரியப்பன் கடை பச்சை மிளகாய் சின்ன வெங்காயம் அரைத்து விட்ட சால்னா.. யானைக்கல் பரமேஸ்வரியில் வெங்காயக் குடல் குழம்பு.. கோரிப்பாளையம் சார்லஸில் தரும் கார சிக்கன் சால்னா.. புதூரில் கோழி சில்லறை சால்னா.. ஆறுமுகம் கடை எலும்பு சால்னா.. செல்லூரில் ஈரல் சால்னா.. இதெல்லாம் சுவைத்திருந்தால் சிவபெருமான் தன் திருவிளையாடலில் புட்டுக்கு பதில் சால்னாவுக்கு மண் சுமந்திருப்பார்.!
பிறகு திடீரென எடப்பாடி முதல்வர் ஆனதுபோல விருதுநகர் (தூத்துக்குடி) பொரித்த புரோட்டாக்கள் ஆட்சியை பிடித்தன.. மதுரையில் இருந்து ஒருவர் விருதுநகர் போவதாக இருந்தால் அவர் கையில் ரூபாயை திணித்து பொரித்த புரோட்டா வாங்கி வரச் சொல்லுவார்கள்.. மாலை 6 மணிக்கு மேல் விருதுநகரில் இருந்து மதுரைக்கு வரும் பஸ்களில் ரூம் ஸ்ப்ரேயர் அடித்து விட்டது போல..
புரோட்டா சால்னா குழம்பு மணக்கும் 50 பயணிகள் என்றால் நிச்சயம் 30 பேர் புரோட்டா பார்சல் வைத்து இருப்பார்கள்.. அதிலும் பர்மா கடை புரோட்டா பிரமாதம்.! விருதுநகரிலும் பேருந்து நிலையம் அருகில் ஸ்டார் பரோட்டா, விருதுநகர் புரோட்டா கடை ஆகியவை பிரபலம்.. மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்டிலும் சில பொரித்த புரோட்டா கடைகள் தோன்றின! தண்ணி போல கொதிக்கும் எலும்பு குழம்பை பொரித்த புரோட்டாவில் ஊற்றி ஊற வைத்து சாப்பிடும் சுகம் எல்லாம் ஆஹா.!
குற்றாலத்தில் பார்டர் கடை, பிலால் கடை, நெல்லை பஸ் ஸ்டாண்டில் ஜன்னத், தென்காசியில் அஹ்மத், கடையநல்லூர் அக்பர் கடை, தளவாய்புரம் கண்ணாடிக்கடை, இராஜபாளையம் பஸ்ஸ்டாண்ட் கடை, நாகர்கோவில் சக்கரவர்த்தி, வள்ளியூரில் கோர்ட் எதிரில், தூத்துக்குடி அழகர் கடை, மானாமதுரை பாண்டி கடை, சிவகங்கையில் மதுரை முக்கில் இருக்கும் கடை, என
நாங்கள் வேட்டையாடிய புரோட்டா கடைகள் ஏராளம்.. இப்போது புரோட்டா நான் சாப்பிடுவதில்லைன்னு சொன்னா என் செட்டில் எவனும் நம்ப மாட்டான்.. ஆசையிருந்தால் வடபழனி கேம்பஸிலோ சிராக்கிலோ பெப்பர் பாயாவுடன் ஒரு கோதுமை புரோட்டாவோடு நிறுத்திக் கொள்கிறேன்.. புரோட்டாவில் தீமைகள் இருக்குன்னு இவ்வளவு விழிப்புணர்வு வந்தும் இன்னும் உணவு விற்பனையில்..
சக்கை போடு போடுகிறது புரோட்டா என்றால்.. இது தமிழகத்தின் அடையாளமாக தமிழனின் உண(ர்)வாக கலந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின்பு புரோட்டா சாப்பிடுவதை நிறுத்திவிடலாம் என்றால் யாரும் இதை சாப்பிடலாம் குற்றாலம் பிலால் கடை க்ரேப் ஆம்லேட்டுடன்.. சுக்கா வறுவல் க்ரேவி சூடான குடல் குழம்பு ஊற்றி பஞ்சு போன்ற புரோட்டா சாப்பிடும் எவரும் சொல்ல முடியாது புரோட்டா சாப்பிடாதிங்கன்னு! சரிதானே!
(ஏவ்வ்வ்வ்வ் (நிறைவு)
இதை படிப்பவர்கள் உங்களைக் கவர்ந்த.. வித்தியாசமான உங்க ஊர் புரோட்டா கடை பேரை கமெண்ட்டில் சொல்லலாம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக