எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

திங்கள், 26 மார்ச், 2018

ரவாதோசை 1


முறுகல் - 1

அம்மி கொத்தியது போல முகமெங்கும் துளைகள் இருக்கும் யம்மியான ரவா தோசையை இரசித்து சுவைப்பது 65 ஆவது கலை என்பேன்! நமக்குக் காவிரியைத் தராத கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரப்பட்ட பெருமை ரவா தோசைக்கு உண்டு!

ரவா தோசையில் சாதா ரவா,
ஆனியன் ரவா, மசால் ரவா, வெஜிடபுள் ரவா, டிரைஃப்ரூட் ரவா, நெய் ரவா, போன்றவை பிரபலமான வகைகள் ஆகும்.. மதுரையில் முட்டை வெள்ளைக் கரு ரவா என்பது முன்பு  ஐயப்பா தோசைக் கடையின் பிரபல மெனுவில் ஒன்றாக இருந்தது.!

இப்போது அவர்கள் கடை 100 சதவீத வெஜிடேரியன் ஆகிவிட்டபடியால் அந்த தோசையை மிஸ் செய்தவர்களில் நானும் ஒருவன்..! 

இனி ஒவ்வொரு ரவா தோசையாக பார்ப்போம் 

முதலில் சாதா ரவா தோசை.!  மிளகும் உடைத்த முந்திரியும் தூவி வார்க்கும் தோசை!முறுகலா ரவா தோசை என்பதே இதன் உண்மையான லட்சணம்.. 

ஆனால் சிலர் அப்பளம் போல அதி முறுகலாக சுட்டு இதன் மாண்பை குலைத்து விடுவார்கள் அந்த முறுகல் எப்படி இருக்கணுமுன்னா வேஃபர்ஸ் எனப்படும் பிஸ்கெட் சாப்பிட்டு இருப்பீர்கள் அந்த பதத்தில் இருத்தல் சாலச் சிறந்தது சுவைத்தால்..
அப்படியே வாயில் கரைய வேண்டும்.. 

மாவட்டமான 1 ரவா தோசையை நான்கு உள் வட்டமாக பிரித்து கொள்ளவும் முதல் வட்டம் அதன் விளிம்புகள் அது முறுகலாகவும் அடுத்த வட்டம் மென் முறுகலாகவும் 3வது வட்டம் முறுகலும் மென்மையும் 4 வது வட்டம் பஞ்சு போல மென்மையாகவும் இருப்பதே..

மிகச் சிறந்தது.. சாதா ரவா தோசை ராமன் போல அதற்கு ஏற்ற ஒரே சீதை தேங்காய் சட்னி மட்டுமே!  சாம்பார் ஊற்றுவது என்றால் அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார் ஓகே.. ரவா தோசை மீது சாம்பாரை கொட்டி சாப்பிடுவது ஒரு பாவச் செயல்! ரசனை கெட்டவர்கள் தான் அப்படி சாப்பிடுவர்!
மிளகு இல்லாத ரவாவில் சிலர் பச்சை மிளகாய் போடுவார்கள் அது இன்னும் டிவைன்.. வெஜிடபிள் ரவாவில் காரட், வெங்காயம், மிளகாய், பீன்ஸ், முட்டை கோஸ் போடுவார்கள், இதற்கு தக்காளி சட்னி புதினா சட்னி செம தூளாக இருக்கும் வெஜ் ரவாவும் அதிமுறுகலாக இருக்கக்கூடாது என்பதே ஆதாரவிதி!
ரவா தோசை எல்லாம் அப்படியே கல்லில் எடுத்தவுடன் தட்டுக்கு 

வரவேண்டிய சமாச்சாரம் அதை ஆற வைத்து தின்பது பெருங்குற்றமாகும்.. கொஞ்சம் முறுகலில் ஒரு விள்ளல் அடுத்து பஞ்சு போன்ற இடத்தில் ஒரு விள்ளல் இரண்டையும் ஒரே நேரத்தில் எடுத்து சட்னியில் தோய்த்து ருசிப்பது
ரவா தோசையினை ரசித்து சாப்பிடும் முறையாகும்.. முறுகலான ரவா கூட சாப்பிடலாம் கருகலான ரவா கம்பெனிக்கு ஆகாது.. அதை தவிர்த்து விடுவது நலம்.. ரவா தோசையின் மகாராஜா ஆனியன் ரவா அதை மரியாதையுடன் கையாள்வது 66வது கலை அது பற்றி அடுத்த பதிவில்..
வார்ப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக