எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 25 மார்ச், 2018

புரோட்டா புராணம் 1


எங்களுக்கு ரொம்ப பிடிச்ச உணவு ஃப்ரைடு ரைஸ் & நூடுல்ஸ்”தான்.. 85% பேரின் விருப்பம் இது..!

சமீபத்தில் 10 வயதிற்கு மேல் 15 வயதிற்குட்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட சர்வே முடிவு இப்படிச் சொல்கிறது.. இதைச் சொன்னவர்கள் சென்னை, மும்பை, பெங்களூர் நகரத்தை சேர்ந்த பிள்ளைகள் இல்லை.! மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற பெரிய நகரமும் கிராமமும் இல்லாத ஊர் பிள்ளைகளே.!

எப்படி இன்றைய பிள்ளைகளை நூடுல்ஸ் ஃப்ரைட் ரைஸ் ஆக்ரமித்துக் கொண்டதோ அது போல என்(எங்கள்) இளம்பிராயத்தில் ஆக்ரமித்துக் கொண்ட ஒரு உணவு தான் புரோட்டா.! எப்படி பெப்சி கோக் உடலுக்கு கேடுன்னு தெரிஞ்சும் குடிக்கிறமோ அதுபோல புரோட்டாவை ஆயிரம் குறை கூறினாலும் தமிழ் சினிமாவில் ஹீரோ ரவுடியாக இருந்தாலும் அவனை காதலிக்கும் ஹீரோயின் போல..
புரோட்டா மீது கொண்ட காதல் அழியாது.!

1975 வரை புரோட்டாக் கடைகள் தமிழகத்தில் கிடையாது 76களின் பிற்பகுதியில் சேலத்தின் பெரிய ஓட்டல்களான வில்வாத்திரி பவன், எங்கள் கடையான ராஜகணபதி ஓட்டல், கே.ஆர்.பவன், போன்ற கடைகளில் மெல்ல சைடுரோலில் தலை காட்ட ஆரம்பித்தது புரோட்டா..! சப்பாத்தி அளவிற்கு பெரியதாய்.. குருமாவுடன் தோன்றிய அந்த..கெட்டப் புரோட்டாவிற்கு அவ்வளவு பொருத்தமாக இல்லை.. பெரிய வரவேற்பும் இல்லை.. காரணம் அப்போது புரோட்டாவை அடித்து தரும் வழக்கம் இல்லை.. தோசை சப்பாத்தி சுடுவது போல அப்படியே சுட்டு எடுத்து தந்தார்கள்.. என் மேல எவனாவது கை வச்சி பாருங்கடான்னு புரோட்டா கதறிய கதறல் எவர் செவியிலும் விழவில்லை.. 1980 களில் ஒரு பெரிய புரட்சி ஏற்பட்டது.!

அன்று காபிபார் என்னும் கான்செப்ட் சேலம் முழுவதும் பிரபலமாகத் துவங்கியிருந்தது.. பன், ரஸ்க், கேக், பிஸ்கெட், போன்றவை பெரிய பெரிய கண்ணாடி பாட்டில்களில் அடுக்கியிருக்க, ஆரஞ்சு, ரோஸ் வண்ணத்தில் பெயிண்ட் அடித்து மக்களை கவர்ந்த கலர்ஃபுல் காபி கடைகள் அவை! ஏற்கனவே டீக்கடைகள் மிகுந்த நம் ஊரில் காபிக்கு தனி கடை என்பது புதிதல்ல.. ஆனால் புரோட்டாவுக்கு தனிக்கடைகள்.. வர ஆரம்பித்தது தான் ஆச்சரியம்.. பத்தடிக்கு பத்தடி இடம் இருந்தால் வாசலில் கல் வைத்து புரோட்டா சுடலாம் என்னும் ஃபார்முலாவை கண்டறிந்தவர் யார் எனத் தெரியவில்லை.. நிச்சயம் பேடண்ட் ரைட்ஸ் வாங்கியிருந்தால் இன்று ராயல்டி பணத்தில் அவர் தமிழக பில்கேட்ஸ் ஆகியிருப்பார்.. யாரோ ஒரு எடிசன் சால்னா என்கிற குழம்பை புரோட்டாவுக்கு இணை சேர்க்க கண்டுபிடித்தார்.!

அதுவரை வெஜிடபிள் குருமா என்னும் தனக்கு பொருந்தாத தன் வயதிற்கு மூத்த மொக்கை பிகர்களுடன் ஜோடி போட்ட புரோட்டாவிற்கு சிவாஜி & பத்மினி, சூர்யா & ஜோதிகா, பிரபாஸ் & அனுஷ்கா போல ஒரு அற்புதமான இணையாக அமைந்தது சால்னா.! தமிழகத்து நாக்குகளை மெல்ல தன் பிடிக்குள் கொண்டுவர ஆரம்பித்தது புரோட்டா.. துவங்கியது ஒரு புதிய சகாப்தம்.!

நாங்கள் வசித்த கிச்சிப்பாளையத்தில் இருந்து திவான் பீடி கம்பெனி தாண்டி ஒரு 15 கடைகள் தாண்டினால் வலப்புறம் இருக்கும் புரோட்டா கடை அப்போ செம ஃபேமஸ் (இப்பவும் என்கிறார்கள்) சேலத்தில் இதற்கு ஆரம்பத்தில் ரொட்டின்னு தான் பேரு.. ஒரு சிடி சைசில் மொறு மொறுன்னு லேயர் லேயராக இருக்கும் சூடான புரோட்டாவின் தலை மீது சால்னா ஊற்றி சாப்பிடுவது எங்களுக்கு..
ஹரஹரமகாதேவகி ஸ்டைலில் சொன்னால் சுஹானுபவமாக இருந்தது.!

 அப்போதும் புரோட்டா அடித்து தரும் வழக்கம் இல்லை.! அதை கண்டுபிடித்த விஞ்ஞானியும் யார் என்று தெரியவில்லை.! அப்போதே அந்தக்கடையில் பார்சலுக்கு கூட்டம் குவியும் 7 மணிக்கு போனால் பார்சல் வாங்கி வீடுவர 8மணி ஆகிவிடும்.! மெல்ல மெல்ல அதற்கு அடிமையாகி வாரத்தில் ஒரு நாள் என்பது 3நாட்கள் ஆனது!

அப்போது என் தந்தையார் நடத்திவந்த ஓட்டலை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார்.. வ.உ.சி மார்க்கெட் எதிரில் உள்ள தமிழ்மணி ப்ரஸ் அப்பாவின் நண்பருடையது.. அப்பா மாலை வேளைகளில் அங்கு தான் அமர்ந்திருப்பார் நாங்கள் பள்ளி விட்டு வரும் போது நேராக அங்கு செல்வோம் அப்பா இருந்தால் அப்பா ரொட்டி வேணும்பா என தங்கை உமாவை கேட்க வைப்பேன்.. அப்பாவுக்கு உமான்னா அவ்வளவு ப்ரியம்

உடனே பணம் தந்துவிடுவார் 5 ரூபாய்க்கே 10 புரோட்டா கிடைக்கும் இப்படியாக புரோட்டாவும் சால்னாவும் எங்கள் ப்ரியத்திற்குரிய உணவாகிப் போனது.. காலமும் வாழ்க்கைச் சக்கரமும் மெல்ல எங்களை நகர்த்தி மதுரைக்கு கூட்டி வந்தது.. சேலத்தில் மகிழ்மதி போல கோலோச்சிய பரோட்டா.. மதுரையில் காலகேயரின் ராட்சஸ படை போல் விரிந்திருப்பது அப்போது எனக்கு தெரியாது.!
வீசுவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக