எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

ஞாயிறு, 17 ஜனவரி, 2021

ஆரோக்கியத்துக்கு உறுதுணையாகும் தேங்காய்



நாம் அலட்சியம் செய்யும் உணவு பொக்கிஷங்களில் ஒன்று தேங்காய். பாலில் தான் சத்துக்கள் உள்ளன என்று பாலை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கும் அதே நேரம் தாய்ப்பாலுக்கு இணையான தேங்காயை அப்படியே விட்டு விட்டோம். அதனால் தான் பாலின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அதில் சேரும் கலப்படங்களும் அதிகரித்துக் கொண்டே போகின்றது. குழந்தைகள் கூட அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர் 

கலப்படம் இல்லாத தேங்காயை பற்றி கொஞ்சம் தெரிந்துக் கொள்ளுங்கள். அவசியம் அதனை தினமும் பாலுக்கு பதில் தேங்காயை பச்சையாக உண்டு வாருங்கள். பாலில் இல்லாத பல மகத்துவங்கள் தேங்காயில் இருக்கிறபடியால் அதனை தொடர்ந்து உண்ணும் பொழுது உங்கள் உடலில் அற்புத மாற்றங்கள் உண்டாகும்.

உடலில் சேரும் கெட்ட கொழுப்பை (LDL Cholesterol) கரைக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடை குறையும். இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
உடலுக்கு நன்மை தரும் நல்ல கொழுப்பை (HDL Cholesterol) அதிகரிக்கும்.
தேங்காயில் இருக்கும் மெக்னிசியம் சத்து எலும்புகளுக்கு சக்தியை தருகிறது. இதனால் மூட்டுவலி போன்றவை குணமாகும் 
சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்திக்கு வழி செய்யும்.
களங்களை பாதுகாக்கும்.
அதில் இருக்கும் arginine எனும்  அமிலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. 
தலை முடி வளர்ச்சியை மேம்படுத்தும் கல்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது.
இதில் இருக்கும் நல்ல கொழுப்பு தோல் அழகை மேம்படுத்தும் 
இதில் இருக்கும் எளிதில் கரையக்கூடிய நார்சத்து மலச்சிக்கலை தீர்க்கும்.
வயிற்று புண் மற்றும் வாய் புண் மாற ஒரு சிறந்த உணவு.
நோய் எதிர்ப்பு சக்தியை வலிமையாக்கும்.
தேங்காயில் இருக்கும் குளுக்கோசு மூளை திறனை சீராக்கி ஞாபக மறதியை சரி செய்யும் 
இளநரையை போக்கும் 

குழந்தைகளுக்கு பாலுக்கு பதில் தினமும் தேங்காய் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். கடித்து உண்ண முடியாத குழந்தைகளுக்கு பாலாக பருக கொடுங்கள். குழந்தைகள் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். எளிதில் நோய்வாய் பட மாட்டார்கள்.

தேங்காயை சமைத்து உண்ணும் பொழுது தான் அது கெட்ட கொழுப்பாக மாறுகிறது. ஆகவே சமைத்து உண்பதை தவிர்த்து ஆரோக்கியமான உணவுகளோடு பச்சை தேங்காயையும் சேர்த்து தினமும் உண்ணுங்கள். அது தரும் மாற்றம் உங்களையே வியக்க வைக்கும்.










 

குளுக்கோஸ் பவுடர் எந்தெந்த பொருள் சேர்த்து தயாரிக்கிறார்கள்? இதை சாப்பிடுவதால் நன்மையா தீமையா?

  • சுக்ரோஸை (கரும்பு சர்க்கரை) நீர்த்த ஹைட்ரோகுளோரிக் அமிலம் அல்லது சல்பூரிக் அமிலத்துடன் சுமார் இரண்டு மணி நேரம் வேகவைத்து குளுக்கோஸ் ஆய்வகத்தில் தயாரிக்கப்படும்.
  • இது சுக்ரோஸை குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸுக்கு ஹைட்ரோலைஸ் செய்கிறது.
  • பிரக்டோஸிலிருந்து குளுக்கோஸைப் பிரிக்க அதை குளிரூட்டுவர்.
  • அவ்வாறு குளிரூட்டும் போது அதில் ஆல்கஹால் சேர்க்கப்படும்.
  • இதன் மூலம் குளூக்கோஸ் பெறப்படும்.
  • இதனால் நன்மையா? தீமையா? என்று கூறும்போது நன்மைதான்.
  • ஆனால் அதுவும் அளவுடன் இருப்பது நன்று.
  • அளவுக்கு மீறும்போது இதனால் ஒருசில உடல்நலக் கேடும் ஏற்படலாம்.

கடைகளில் வாங்கி சாப்பிடும் கிரில் சிக்கன் உடலுக்கு நல்லதா?

கடைகளில் கிடைக்கும் கிரில் சிக்கன்.. அஜினோமோட்டோ… கலர் பவுடர் சேர்த்து.. பாமாயில் கலந்து மசாலா கலவையில் மேரினேட் செய்து சுட்டு எடுக்க படும்..

அதில் எண்ணெய் குறைவாக இருந்தாலும்.. ஆரோக்கியமான உணவு என்று சொல்லி விட முடியாது . அதற்கு துணை உணவாக வரும் மயோனைஸ் கூட எண்ணெயை நுரைத்து வர அடித்து செய்ய படுபவை தான்.. வயிற்று புண் உண்டாகும்.

டயட் மெய்ன்டெயின் செய்ய நீங்களே சமைத்து சாப்பிடுவதே சிறந்தது..

என் தம்பி செய்யும் ரொம்பவும் சிம்பிளான பேலியோ ரெசிபி சொல்கிறேன்..

ஒரு முழு சிக்கனை தோலுரித்து… அளவான சைஸ் துண்டுகளாக வாங்கி கொள்ளவும்..

ஒரு மூன்று முறை.. மஞ்சள் தூள் உப்பு சேர்த்து கலந்து கழுவி சுத்தம் செய்யவும்.

குக்கரில்.. தேங்காய் எண்ணெய் இரண்டு ஸ்பூன் விட்டு.. சீரகம் ஒரு ஸ்பூன்.. கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து.. பின் சுத்தம் செய்து வைத்த சிக்கன் சேர்த்து.. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்..ஒரு பச்சை மிளகாய்… ஒரு பெரிய வெங்காயம் வெட்டி சேர்த்து.. ஒரு சிறிய தக்காளி சேர்த்து.. அரை ஸ்பூன் கரம் மசாலா தூள்.. கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி…கால் ஸ்பூன் மஞ்சள் தூள் …அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலக்கி.. குக்கரை மூடி.. ஸ்டீம் வந்தவுடன்.. வெயிட் போட்டு.. இரண்டு விசில் வரும் வரை வேக விடவும்.

பின்பு பிரஷர் ரீலீஸ் ஆனவுடன்.. சூடான சிக்கன் சூப் உடன் மிளகுத்தூள் சேர்த்து சாப்பிட்டால்.. அருமையான பேலியோ சிக்கன் .. எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.. பிரச்சினை இல்லை..

வயிற்றுக்கு உகந்தது.... உடலுக்கு நல்லது.. slow electric cooker வாங்கி கொண்டால் இன்னும் சுலபமாக இருக்கும்.


ஞாயிறு, 3 ஜனவரி, 2021

அனைவருக்குமே ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது; தயவுசெய்து அறிவுரை சொல்வதை நிறுத்துங்கள்- சிலம்பரசன்



சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, பாரதிராஜா, நிதி அகர்வால், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஈஸ்வரன்'. தணிக்கையில் 'யு' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதற்காகத் திரையரங்குகள் ஒப்பந்தம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா இன்று (02.01.21) சென்னையில் உள்ள ஆல்பர்ட் திரையரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் சிலம்பரசன், சுசீந்திரன், பாரதிராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிலம்பரசன் பேசியதாவது:

இந்த படத்துக்கு முன் நான் எப்படி இருந்தேன், இப்போது நான் எப்படி இப்படி ஆனேன், எப்படி இந்த படம் முடிந்தது, எப்படி பொங்கலுக்கு வருகிறது என்று பலரும் ஆச்சர்யத்தோடு கேட்டார்கள். சத்தியமாக எங்களுக்கு இதற்கான பதில் தெரியவில்லை. ஊரடங்கின் போது மாநாடு படத்தின் படப்பிடிப்பை எப்போது மீண்டும் எப்போது தொடங்குவது என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தோம். ஆனால் அந்த படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினரின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அப்போது அது சாத்தியமாகவில்லை. எனினும் விரைவாக ரசிகர்களுக்காக ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. ஏற்கெனவே சுசீந்திரனிடம் ஒரு படம் குறித்து பேசியிருந்தேன். மீண்டும் அவரிடம் என்னுடைய யோசனையை தெரிவித்தபோது அவர் சம்மதம் தெரிவித்தார். வீடியோ காலில் தோன்றி என்னிடம் ‘ஈஸ்வரி’ படத்தின் கதையைச் சொன்னார்.
ஊரடங்கு காலகட்டத்தில் அனைவருமே ஒருவித மன உளைச்சலில் இருந்தோம். ஒரு எதிர்மறையான சூழலில் இந்த கதையை கேட்ட போது ஒரு நேர்மறை எண்ணம் உருவானது. கதையை கேட்ட எனக்கே இவ்வளவு நேர்மறை எண்ணம் எழுகிறது. இந்த படம் திரைக்கு வந்தால் மக்களுக்கும் நேர்மறை விஷயமாக இருக்குமே என்று தோன்றியது. அப்படி உருவானது தான் ‘ஈஸ்வரன்’.

இப்போது எங்கு பார்த்தாலும் எதிர்மறை எண்ணங்கள், பொறாமை, யார் எது செய்தாலும் அதை குறை சொல்லவே ஒரு கும்பல் இருக்கிறது. தயவுசெய்து அறிவுரை சொல்வதை நிறுத்துங்கள். இங்கு அனைவருக்குமே ஒரு தனிப்பட்ட வாழ்க்கை உள்ளது. அவரவர்க்கு ஏதோ ஒரு வலி இருக்கும், கஷடம் இருக்கும். ஏதோ ஒரு விஷயத்தை அனைவருமே போய்க் கொண்டிருக்கிறோம். முதலில் உங்களைச் சுற்றி இருப்பவர்களின் அறிவுரையைக் கேட்பதை நிறுத்துங்கள். என் ரசிகர்களுக்கு ஒரு நண்பனாக ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். வெளியே எப்படி இருந்தாலும், உள்ளே சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். மனம் சுத்தமாக இருந்தால் எல்லாமே தானாக நடக்கும். என் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் மனதில் வலி இருந்ததால் தான் என்னால் எதுவுமே செய்யமுடியவில்லை. படப்பிடிப்புக்குக் கூட போகமுடியவில்லை. இறைவன் வேறு எங்கும் இல்லை, நம் இதயத்தில் தான் இருக்கிறார். உள்ளே வருத்தப்பட்டேன் வெளியில் எதுவுமே சரியாக நடக்கவில்லை. உள்ளே சரி செய்ததும் அனைத்தும் சரியாக நடந்து கொண்டிருக்கிறது.

அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள். போட்டி, பொறாமை, சண்டை இவையெல்லாம் எதுவுமே வேண்டாம்.

இவ்வாறு சிலம்பரசன் பேசினார்.

சனி, 24 அக்டோபர், 2020

ரேஷன்அரிசி தயாராகும் விதம் பற்றி அறிவீரா??


இதுவரை புரியாத புதிராக இருந்து வந்ததை, இன்வெஸ்ட்டிகேட் ஜர்னல் என்றுசொல்லி பொய்யை உண்மைபோல சொல்லிவரும் தமிழகத்தின் புகழ் பெற்ற வார இதழ்களில் கூட இந்த உண்மைச் செய்தி வெளிவந்ததில்லை ...

இரண்டு அரிசி வகைகளிலுமே ஒரே மாதிரியான #துர்வாடைத்தானே வர வேண்டும்? 

ஆனால், அப்படி வருவதில்லையே!

பொதுவாக வீடுகளில், புழுங்கல் அரிசிக்கான நெல்லை சுத்தமான முறையில், ஒருநாள் மட்டுமே ஊற வைத்து, பின் அவித்து நன்றாக காய வைப்பார்கள். ஆனால், ரேசன் அரிசிக்கான நெல்லை குறைந்தது ஐந்து நாட்கள் முதல் ஒருவாரம், பத்து நாட்கள் என சுத்தம் செய்யப்படாத தொட்டிகளில் கொட்டி ஊறவைத்து, பின் அவித்து காய வைப்பார்கள்....

வீட்டில் ஊறவைத்து அவிக்கும் போது, அதற்கே உரிய மனம் வரும். ஆனால், இங்கு அவிக்கும் போதே துர்நாற்றம்தான் வரும். மில் களங்களில் காயப் போட்டிருக்கும் போது, அந்த ஏரியா முழுவதுமே துர்நாற்றம் வீசும். ஆனால், அங்கு வசிப்பவர்கள் அதற்கு பழகி இருப்பார்கள். புதிதாக செல்வோர் மூக்கைப் பிடித்து கொண்டு நடையை கட்டுவார்கள். இதனை நானும் செய்திருக்கிறேன்.

ரேஷன் அரிசிக்கு என்று தனி நெல் ரகம் இருக்குன்னுதான் டவுனில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். 

அப்படி ரேஷன் அரிசிக்கு தனி நெல் ஒன்றும் இல்லை. அதே நெல்லை வீட்டில் நாம் பதப்படுத்தி அரைத்தால் அந்த அரிசி சூப்பராய் இருக்கும். அப்படியானால் அதே நெல்லிலிருந்து எப்படி ரேஷன் கடைகளில் விற்கும் அல்லது விலையில்லாமல் கிடைக்கும் நாற்றம் பிடித்த அரிசியை தயார் செய்கிறார்கள் என்பது ஒரு சிதம்பர ரகசியம். அதை நான் இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் ஜில்லாவில்தான் சிவில் சப்ளை டிபார்ட்மென்டின் நெல் கொள்முதல் 90 சதம் நடைபெறுகிறது. குறிப்பாக குறுவை நெல் மகசூல் முழுவதும் சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் கொள்முதல் செய்துகொள்கிறது.

 குறுவை நெல் அறுவடை சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். அறுத்த நெற்பயிரை அப்படியே அடித்து வரும் நெல்லை சாக்கில் பிடித்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

நெல்லில் ஈரம் 10/15 சதம் இருக்கும். இதற்குக் கூடவே இருந்தாலும் இருக்கலாம். அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இவைகளின் பல போராட்டங்களால் இந்த ஈர நெல்லை அப்படியே கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டிருக்கிறது. நெல்லில் ஊரப்பதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு விலையில் குறைத்துக்கொள்வார்கள். ஈரப்பதத்தை அளக்க புதுமையான கருவிகள் எல்லாம் உண்டு. இந்த கணக்கெல்லாம் போட்டு விவசாயி கொண்டுவந்த நெல்லைக் கொள்முதல் செய்வார்கள்.

இப்படிக் கொள்முதல் செய்த நெல் அப்படியே நெல் அரைவை மில்களுக்குப் போய்விடும். சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் இந்த மில்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும். ஈரப்பசைக்கான கழிவுகள் போக மிச்சமிருக்கும் நெல்லில் 68 சதம் அரிசி உற்பத்திசெய்து கொடுக்கவேண்டும். அதாவது இது புழுங்கல் அரிசிக்கான கணக்கு.

சாதரணமாகவே புழுங்கல் அரிசி தயார் செய்யும்போது 70 சதம் அரிசி கிடைக்கும். புழுங்கலரிசி தயார் செய்ய நெல்லை ஒரு முறை வேக வைப்பார்கள். ஆனால் இந்த மில்காரர்கள் இந்த நெல்லை இரு முறை வேகவைப்பார்கள். அப்போது அரிசி அவுட்டர்ன் 73 அல்லது 74 சதம் கிடைக்கும். ஆகவே சிவில் சப்ளை ரூல்படி 68 சதம் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் மீதி 6 சதம் மில்காரர்களுக்கு உபரி லாபம். தவிர ஈரப்பசை கணக்கில் பல குளறுபடிகள் செய்து அதிலும் லாபம் வரும்.

இப்படி தயார் செய்த அரிசி ஏறக்குறைய ஊறவைத்த அரிசி மாதிரி ஈரமாகத்தான் இருக்கும். அந்த அரிசியை சாக்கில் பிடித்து சிவில் சப்ளை கோடவுனுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த கோடவுன்களில் எப்போதும் 6 மாத ரேஷன் தேவைக்கான அரிசி ஸ்டாக் வைத்திருப்பார்கள். புதிதாக வந்த அரிசி மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அட்டி போட்டு அடுக்கி வைப்பார்கள். இப்படி வந்த அரிசி ரேஷன் கடைகளுக்குப் போக எப்படியும் 6 மாதம் ஆகும். சில சமயம் அதற்கு மேலும் ஆகலாம்.

நாம் வீட்டுக்கு அரிசி வாங்கி வந்தால், நம் வீட்டுப் பெண்கள் அந்த அரிசியை ஒரு ஓரமாக கொட்டி பரத்தி வைப்பார்கள். இரண்டு நாட்கள் கழித்து அதை ஏதாவது பாத்திரத்தில் எடுத்து வைப்பார்கள். அப்போதுதான் அந்த அரிசியில் உள்ள ஈரப்பதம் போய் அரிசி கெடாமல் இருக்கும். 

அரிசி வாங்குவதில் அனுபவம் உள்ளவர்கள் அரிசி வாங்கும்போது இரண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டு கடித்துப் பார்ப்பார்கள். கடிக்கும்போது "கடுக்" என்று சத்தம் வரவேண்டும். அப்போதுதான் அந்த அரிசி நன்றாகக் காய்ந்த அரிசி என்று பொருள். அந்த அரிசியையே இரண்டு நாள் ஆறவைத்து பிறகுதான் எடுத்து வைப்பார்கள்.

சிவில் சப்ளை கோடவுனுக்கு வரும் அரிசி ஏறக்குறைய இட்லிக்கு ஊறவைத்த அரிசி மாதிரிதான் இருக்கும். இதை காற்றோட்டம் இல்லாத கோடவுனில் பத்துப்பனிரெண்டு மூட்டைகளாக அட்டி போட்டு ஆறு மாதம் வைத்திருந்தால் என்னென்ன மாறுதல்கள் அந்த அரிசியில் உண்டாகும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த அரிசி மக்கி, பூசணம் பிடித்து, கம கம என்று ஒரு ஸ்பெஷல் வாசனை ஏற்பட்டு மஞ்சள் கலராக மாறி இருக்கும். இதுதான் ரேஷன் அரிசி தயாரிக்கும் முறை....

புதன், 21 அக்டோபர், 2020

தேங்காய் சீனிவாசன் நினைவலைகள்



ஹலோ... யாரு ஜப்பான் மேனேஜர் சால்பத்திரி கும்மாவா நீ ஒரு ரெண்டுங்கெட்டான்யா தமிழும் தெரியாது இங்கிலீஷும் புரியாது சரி உனக்கு தெரிஞ்ச ஜப்பான் பாஷையிலேயே திட்டித் தொலைக்கிறேன்....

ஈப்பலத்தா ஈசக்கண்ணா ஈப்பலத்தாவோ ஆசைக்கண்ணே வைரமல்லா ஆனமல்லாவோ அஸ்கலக்கா லக்கா அஸ்கலக்கா புட் த போன்... 

உஜாங்கு மூக்குப் புள்ளி... ஊத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி... ஆ.. மோந்து... மோந்து... மோந்து...  ஆல் த ஜூடோஸ் ஃபாலோ மீ யா... ஆல் தி ஜிலேபிஸ் ரவுண்டா இருக்கும் மைசூர்பாக் சதுரமா இருக்கும் தட்ஸால் ஆ... என்னததே.. கில்பான்ஸா.. ஆ..  போன்ற பிரத்யேக வார்த்தை பிரயோகங்கள் தேங்காய் அவர்களின் சிறப்பு.. அவரின் உச்சரிப்பில் இதெல்லாம் கேட்டாலே சிரிப்பு அள்ளும்!

தேங்காய் சீனிவாசனின் டயலாக் டெலிவரி அவர் ஒருவருக்கே உரித்தானது.. அதே அதே..காசே தான் கடவுளடா போலிச் சாமியார்.. தில்லு முல்லு ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி.. டிக் டிக் டிக் பத்திரிக்கை எடிட்டர்.. இப்படி இவருக்காகவே உருவான கேரக்டர்கள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனித்துவம் பெற்றவை.. பின்னாளில் வில்லனாகவும் வந்து கலக்கியிருப்பார்.!

தமிழ் சினிமாவில் மறக்கவியலாத ஒரு அருமையான கலைஞர்.. நடிகர் டணால் தங்கவேலு தான் இவரது குருநாதர்.. சந்திரபாபுவுக்குப் பின் சென்னைத் தமிழை அநாசயமாக பேசி நடித்த நடிகர் இவரே! இவரைப் பற்றிய இன்னொரு முக்கிய செய்தி.... மக்கள் திலகம், புரட்சி நடிகர்... பொன்மனச்செம்மல்..

என்றெல்லாம் எம்.ஜி.ஆர் அழைக்கப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட "வாத்தியார்" என்னும் பட்டப் பெயர் வைத்தது இவர் தான்.. ஆனாலும் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்.. இவரது சில நடிப்பு சிவாஜியை பிரதிபலிக்கும்.. அவரது நினைவு நாள் இன்று.. உடலால் மறைந்தாலும் நீங்கள் ரசிகர்கள் நினைவில் என்றும் வாழ்கிறீர்கள்

வியாழன், 15 அக்டோபர், 2020

கிரிக்கெட் வீரர் முரளிதரனை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?


1. ஈழத்தில்  தமிழ்மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த நாளில் இறுதி கட்ட போரின் போது, போரை வெற்றிகரமாக முடித்த மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி என்று கருத்து தெரிவித்தார் முத்தையா முரளிதரன்.

2. இனப்படுகொலை குறித்தான விசாரணைக்கு கோரிக்கைகள் எழுந்த போது, இங்கே அமைதி நிலவுகிறது. சர்வதேசம் இதனைக் குழப்ப வேண்டாம் என்று பேசினார் முரளி.

3. முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது, விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்குத் தோன்றியதுஎன கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் முத்தையா முரளிதரன் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

4. பிரிட்டர் பிரதமர் டேவிட் காமரோன் இலங்கை இனப்படுகொலை குறித்த பார்வையிட வந்த போது, காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கூடி அவரிடம் முறையிட்டனர். அப்போது, முப்பது தாய்மார்கள் கூடி போராடுவதால் இலங்கை அரசு தவறு செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது. யாரோ தூண்டிவிட்டு இயக்கும் நாடகம் என்று கிரிக்கெட் வீரர் முரளிதரன் பேசியதால் எதிர்ப்பு உண்டானது.

5. கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி 'தனக்கு தமிழ் தெரியாது’ என்று சிங்களத்தில் உரையாடியதால்  தமிழ் இளைஞர்கள் ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்திட, முரளியைத் தாக்க முயன்றதாக அந்த இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

6. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு இலங்கையின் தங்கல்லை பகுதியில் இரண்டு சிங்கள கிராமங்களைத் தத்தெடுத்து, தனது சொந்தப் பணத்தில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் முத்தையா முரளிதரன்.

7. தனது நட்சத்திர அந்தஸ்தால் இலங்கையில் எப்போது தேர்தல் நடந்தாலும் ராஜபக்சே ஆதரவாளராக தேர்தல் பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளார் முரளி.

ஆக தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை முத்தையா முரளிதரன்800 என்ற பெயரில் விஜய்சேதுபதியை வைத்து சினிமாவாக எடுக்க முயற்சிக்கும் போது எதிர்ப்பு வராமல் எப்படி இருக்கும்.

விஜய்சேதுபதி நடிகர் என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது  அதை அவர் கெடுத்துக் கொள்ளக்கூடாது.. இது போன்ற படங்களை அவர் தவிர்க்க வேண்டும்..

சனி, 28 மார்ச், 2020

பிரபல மலையாள எழுத்தாளர்வைக்கம் முகம்மது பஷீருக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி கேள்விப்பட்டேன்

.

ஒருமுறை ஒரு ஹோட்டலுக்கு சாப்பிடப் போயிருக்கிறார் பஷீர். சாப்பிட்டு முடித்து கை கழுவி விட்டு வந்து பில்லை கொடுக்க பர்ஸை தேடினால்... காணோம். பதறிப் போய் அங்கும் இங்கும் தேடுகிறார் பஷீர்.

"என்ன, பர்ஸை காணலியா?" கல்லாவில் இருந்த முதலாளி கர்ஜித்திருக்கிறார்.
பஷீர் பலஹீனமான குரலில், "ஆம். வரும்போது எடுத்துக் கொண்டுதான் வந்தேன்."

முதலாளி நக்கல் சிரிப்புடன், "எல்லோரும் இதையேதான் சொல்றாங்க. ம்ம்ம்.. நீ போட்டிருக்கற டிரஸ்ஸை கழட்டி கல்லா மேல வச்சுட்டு அம்மணமா போ. அப்போதான் புத்தி வரும்."

கூனிக் குறுகிப் போகிறார் பஷீர். வேறு வழியின்றி ஜிப்பாவை கழட்டி கல்லா மேஜையில் வைத்து விட்டு தலை குனிந்து நிற்க,
முதலாளி குரல் : "ம்...வேஷ்டியையும் கழட்டு."

நாணத்தால் நடுங்கிப் போகிறார் பஷீர். சுற்றிலும் பார்க்கிறார். எழுபது எண்பது பேர் அந்த ஹோட்டலில் அமர்ந்திருக்கிறார்கள்.

ஒருவரும் உதவத் தயாராக இல்லை. எல்லோர் கண்களும் ஒரு சக மனிதனின் ஆடையில்லா தோற்றத்தை காண ஆவலோடு காத்திருந்தன.

வேறு வழியின்றி பஷீர் தனது வேஷ்டியை அவிழ்க்க கை வைத்தபோது, ஹோட்டலுக்கு வெளியிலிருந்து ஒரு குரல் : "நிறுத்துய்யா."

பார்க்கிறார் பஷீர். ஒரு மனிதன்
அழுக்கு லுங்கி பனியனுடன் நிற்கிறான். "வேஷ்டியை அவுக்காதே பெரியவரே, முதல்ல ஜிப்பாவை எடுத்து போடு. யோவ் முதலாளி, அவர் உனக்கு எவ்வளவு தரணும். எடுத்துக்கோ."

கல்லாவில் காசை விட்டெறிந்து விட்டு, பஷீரை வெளியே அழைத்து வருகிறான் அந்த மனிதன்.

நிம்மதி மூச்சோடு நிமிர்ந்து பார்த்த பஷீரிடம் அவன் கேட்கிறான் : "ஏன் பெரியவரே,பர்ஸை ஜாக்கிரதையா வச்சுக்க கூடாதா ? இந்தா , இதில் உன் பர்ஸ் இருக்கா பாரு."

அவன் லுங்கி உள்ளே இருந்து பத்துக்கும் மேற்பட்ட பர்ஸ்களை எடுத்துப் போடுகிறான். அதில் அவரது பர்சும் இருக்கிறது.
பஷீர் அவன் முகத்தை பார்க்கிறார்.
"என்ன பெரியவரே அப்படி பாக்கிறே ? நான் திருடன்தான். ஆனால் மனிதாபிமானம் இல்லாதவன் அல்ல."

இந்த சம்பவம் பற்றி ஒரு கதையே எழுதி இருக்கிறாராம் பஷீர். அதில் சொல்கிறார் : "அவ்வளவு நேரம் அவனோடு நான் பேசிக் கொண்டிருந்தேன். ஆனால் அவன் பெயரை கேட்க மறந்து விட்டேன். அதனால் என்ன ? ஒன்று அறம் அல்லது கருணை. இந்த இரண்டில் ஒன்றுதான் அவன் பெயராக இருக்க முடியும்."

வைக்கம் முகம்மது பஷீர் வாழ்க்கை எனக்கு ஒன்றை உணர்த்துகிறது.

ஒரு எழுத்தாளனின் கடமை தனது எழுத்தின் மூலம் அன்பையும் மனித நேயத்தையும் மலரச் செய்வதே ! 

அதை நிறைவாகவே செய்து விட்டு போயிருக்கிறார் வைக்கம் முகம்மது பஷீர்.

*****************************************************************

திங்கள், 23 மார்ச், 2020

மீன் பிரியாணி!

தேவையான பொருட்கள்:

2 சுண்டு பசுமதி அரிசி
900 மி.லீட்டர் தண்ணீர் (800 மி.லீட்டர் தண்ணீர் + 100 மி.லீட்டர் தேங்காய்ப்பால்)
100 மி.லீட்டர் தண்ணீர் (மசாலா அவியவிட)
3 மே.கரண்டி எண்ணை
1 தே.கரண்டி கடுகு
1 தே.கரண்டி சின்னச்சீரகம்
3 ஏலக்காய்
1 மே.கரண்டி மிளகு (விரும்பினால்)
1 அன்னாசிப்பூ
1 துண்டு கறுவாபட்டை
5 கராம்பு
2 பிரியாணி இலை
300 கிராம் வெங்காயம்
3 தக்காளி
1/2 உள்ளி
1/2” இஞ்சி
1/2 - 1 மே.கரண்டி கரம்மசாலா
1 மே.கரண்டி செத்தல்தூள்
1 மே.கரண்டி மல்லித்தூள்
1/2 மே.கரண்டி சீரகத்தூள்
1/2 தே.கரண்டி மஞ்சள்
உப்பு
கறிவேப்பிலை
1 சிறங்கை மல்லிஇலை
புதினாஇலை (விரும்பினால்)
3 பச்சைமிளகாய் (விரும்பினால்)

மீன் மசாலா:
500 கிராம் மீன்
1/2மே.கரண்டி செத்தல்தூள்
உப்பு
1/2 தே.கரண்டி மஞ்சள்
தேசிப்புளி

செய்முறை:

மீனை சுத்தம் செய்து “மீன் மசாலா” பொருட்கள் எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து குறைந்தது 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
அரிசியைக் கழுவி தண்ணீர் விட்டு குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்
ஊற வைத்த மீனை பொரித்து எடுக்கவும்.

இஞ்சி மற்றும் உள்ளியை அரைத்து அல்லது இடித்து வைக்கவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு மிதமான தீயில் சூடகாக்கவும். அதில் கடுகு, சின்னச்சீரகம், ஏலக்காய், மிளகு, அன்னாசிப்பூ, கறுவாபட்டை, கராம்பு, பிரியாணி இலை ஆகியவற்றைப் போடவும். கடுகு வெடிக்கத் தொடங்கும் போது அதில் வெங்காயத்தைப் போடவும். வெங்காயம் பொன்னிறமாக வந்ததும், அதனுடன் இஞ்சி உள்ளி விழுதை சேர்த்து வதக்கவும்.
அடுத்ததாக வெட்டி வைத்த தக்காளியைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கியதும், அதில் செத்தல்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து அதனுடன் 100 மி.லீட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். தக்காளிக்கலவையில் விட்ட தண்ணீர் வற்றி பிரண்டு வரும் பொழுது, அதில் தண்ணீர், தேங்காய்ப்பால், கரம்மசாலா, மல்லி இலை மற்றும் புதினா இலை சேர்த்து கலக்கவும்.

அரிசியைச் சேர்த்துக் கலந்து உப்பு சுவை பார்த்து, பச்சை மிளகாய் மற்றும் மீன் துண்டுகளை அரசியின் மேல் வைத்து மூடி அவிய விடவும்.
அதி கூடிய வெப்பத்தில் 3 நிமிடங்களும், அடுத்ததாக அளவான வெப்பத்தில் 3 நிமிடங்களும் அவிய விட்டு, அடுப்பை அனைத்து, அப்படியே அடுப்பில் 10 நிமிடங்கள விடவும். அல்லது மிதமான தீயில் அரிசி அளவிற்க்கு தண்ணீர் வற்றும் வரை அவிய விட்டு அடுப்பை அனைத்து, அப்படியே அடுப்பில் 10 நிமிடங்கள விடவும். விரும்பினால் கலந்து பரிமாறவும்.
சுடச் சுட மீன் பிரியானி தயார்!

குறிப்பு:
1 பங்கு அரிசிக்கு 1 1/2 பங்கு தண்ணீர் சேர்க்கவும்.
தேங்காய்ப்பாலின் அளவை விரும்பிய அளவில் கூட்டிக் குறைக்களாம். ஆனால் அவிய விடும் பொழுது தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பாலின் அளவு, அரிசியின் அளவில் 1 1/2 மடங்காக இருக்க வேண்டும்.

மீன் உருண்டை / கேக்!


தேவையான பொருட்கள்:

900 கிராம் மீன்
3 முட்டை
1 தே.க மஞ்சள்
1/2 மே.க மிளகாய்த்தூள்
1/2 மே.க முளகுதூள்
உப்பு
1/2 மே.க தேசிப்புளி
300 மி.லீட்டர் பால்
3 மே.க உருளைக்கிழங்குமா/ கோதுமை மா
1 தே.க வெட்டுத்தூள்
3 மே.க மல்லிஇலை
மாஜரின்/ எண்ணை


செய்முறை:

மீனிலிருந்து தோல் மற்றும் முள்ளை அகற்றி, சுத்தம் செய்யவும்.
மீனை சிறு சிறு தண்டுகளாக வெட்டி, அதனை மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் முட்டை, மஞ்சள், மிளகாய்த்தூள், முளகுதூள் மற்றும் உப்பு சேர்த்து, பசைத்தன்மையாக நன்கு அரைக்கவும்.

அதனுடன் பால் மற்றும் உருளைக்கிழங்குமா/ கோதுமை மா சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும் (களிப்பதம்). அதனுடன் வெட்டுத்தூள் மற்றும் மல்லிஇலை சேர்த்து நன்கு கலந்து, குறைந்தது 30 நிமிடங்கள் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.
ஒரு தாச்சியில் சிறிது மாஜரின்/ எண்ணையை விட்டு மிதமான தீயில் சூடாக்கவும்.

உள்ளங்கையை ஈரமாக்கி, அதில் சிறிது மீன் கலவையை வைத்து விரும்பிய அளவில் உருட்டி / தட்டி சூடான தாச்சியில் போட்டு, பொண்ணிறமாக பொரித்து எடுக்கவும். சுடச் சுட தக்காளி சோஸ்ஸுடன் பரிமாற, சுவையாக இருக்கும்.

குறிப்பு:
இரவு குழைத்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து, காலையில் பொரித்து, பிள்ளைகளுக்கு பாடசாலை உணவாக கொடுத்து விடலாம்.
மசாலாக்களை உங்கள் ருசிக்கேற்ப கூட்டிக் குறைக்கவும்.
உருளைக்கிழங்குமா/ கோதுமை மாவிற்று பதிலாக அவித்த உருளைக்கிழங்கு சேர்க்கலாம்.