ஊர்கூடித் தேர் இழுப்போமா!
முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். தயவு செய்து ‘ஆபாச வீடியோ பார்ப்போரின் பட்டியல் தயார்…அடுத்து கொத்துக்கொத்தாக கைதுதான்’ என்ற ரீதியில் வரும் செய்திகள்,யூ டியூப் செய்திகளைப் புறம் தள்ளுங்கள். அந்த செய்தியில் இருப்பது கொஞ்சூண்டு உண்மை மட்டுமே.
எங்களது ‘செல்லமே’ குழந்தை வளர்ப்பு மாத இதழுக்காக காவல் துறை கூடுதல் இயக்குநர் (சிறார், பெண்களுக்கு எதிரான குற்றங்கள்) திரு.ரவி, இ.கா.ப. அவர்களை இன்று சந்தித்தேன். அந்த நேர்காணல் சிறிது நேரத்தில் இணையத்தில் வெளியிடப்பட இருக்கிறது.
நான் பேசியமட்டில் தெரிந்த விஷயங்கள் இவைதாம்:
*அவரது சிறப்புப்பிரிவு, பெண்கள் மற்றும் சிறாருக்கு எதிரான குற்றங்கள்மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டுமே செயல்படுகிறது.
*குழந்தைகளைத்துன்புறுத்தி, வசீகரித்து பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வீடியோக்களைத்தான் இப்பிரிவு கவனம் எடுத்துப் பார்க்கிறது. அதனை உருவாக்கியோர், தவறான நோக்கத்துடன் பரப்புவோர் ஆகியோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. அதில் மாற்றமில்லை.
*குழந்தைகளை அவ்வாறு சிந்தித்துப்ப்பார்க்கவே சிலரால்தான் முடியும். மனப்பிறழ்வு கொண்டவர்கள் அவர்கள். அதற்குத்தான் சிகிச்சையோ/தண்டனையோ தேவை.




