செட்டிநாட்டு உணவுகள் என்றாலே நாவை சப்புக் கொட்டிக் கொள்வார்கள் அசைவம் சைவம் இரண்டு பாதையிலும் ராஜநடை போட்டு வருவது செட்டிநாட்டு உணவு வகைகளே.. செட்டிநாட்டு சைவ உணவுகளில் புகழ் பெற்ற செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
綾陵 தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் – 60கிராம், பூண்டு - 25/30 வில்லைகள், தக்காளி – 1, வெந்தயம் - அரை டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்,
வரமிளகாய் – 1, கறிவேப்பிலை – கொஞ்சம், புளி - ஒருபெரிய கடலை உருண்டையளவு, சாம்பார் பொடி – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 150 மிலி, உப்பு – தேவையான அளவு
菱 வறுத்து அரைக்க : சீரகம் – அரை டீஸ்பூன், மல்லி - அரை டீஸ்பூன், மிளகு – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டேபிள் ஸ்பூன், கறிவேப்பிலை – கொஞ்சம், சின்ன வெங்காயம் – 3, பூண்டு – 5 வில்லைகள், தக்காளி – பாதி வெட்டியது, வரமிளகாய் -1
செய்முறை : சின்ன வெங்காயத்தை உரித்து வைத்து தக்காளியை சின்னஞ் சிறிதாக நறுக்கி வைக்கவும்.. வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் புளியை நன்கு ஊற வைத்து பிழிந்து சாறு எடுக்கவும்
வாணலியை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வறுத்து அரைப்பதற்கு வைத்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கி இறக்கவும்.. வறுத்ததை ஆற வைத்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.. கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு துவையல் போல அரைத்து கொள்ளவும்.
இன்னொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எஞ்சியுள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும் கறிவேப்பிலை, கடுகு, வரமிளகாய், பெருங்காயப்பவுடர், வெந்தயம், சேர்த்து தாளித்த பின் அதில் பூண்டு மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளியை வெங்காயம் பொன்னிறம் ஆனதும் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும் பிறகு இதில் புளிச் சாற்றினை சேர்த்து கொதிக்க விடவும் குழம்பு கொதிக்கத் துவங்கியதும் அரைத்த மசாலாவுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துவிடவும்.. இதனை பச்சை வாசனை போக நன்கு கொதிக்க விட வேண்டும்.
நிறைவாக அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால் கம கம செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு ரெடி.. குழம்பில் விருப்பம் இருந்தால் சுண்டைக்காய் வத்தலும் சேர்க்கலாம்.
வெறும் அப்பளத்துடன் சாப்பிட்டாலே ருசி அள்ளும்.. பூசணி அல்லது முட்டைகோஸ் கடலை பருப்பு கூட்டு இதற்கு செம காம்பினேஷன்.. தயிர் சாதத்துக்கு இந்தக் குழம்பை தொட்டுக் கொள்ளவும் அதன் சுவைக்கு அடிமையாகி விடுவீர்கள்.. டிவைன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக