எமது தளத்திற்கு வருகை புரிந்ததமைக்கு நன்றி

சனி, 24 அக்டோபர், 2020

ரேஷன்அரிசி தயாராகும் விதம் பற்றி அறிவீரா??


இதுவரை புரியாத புதிராக இருந்து வந்ததை, இன்வெஸ்ட்டிகேட் ஜர்னல் என்றுசொல்லி பொய்யை உண்மைபோல சொல்லிவரும் தமிழகத்தின் புகழ் பெற்ற வார இதழ்களில் கூட இந்த உண்மைச் செய்தி வெளிவந்ததில்லை ...

இரண்டு அரிசி வகைகளிலுமே ஒரே மாதிரியான #துர்வாடைத்தானே வர வேண்டும்? 

ஆனால், அப்படி வருவதில்லையே!

பொதுவாக வீடுகளில், புழுங்கல் அரிசிக்கான நெல்லை சுத்தமான முறையில், ஒருநாள் மட்டுமே ஊற வைத்து, பின் அவித்து நன்றாக காய வைப்பார்கள். ஆனால், ரேசன் அரிசிக்கான நெல்லை குறைந்தது ஐந்து நாட்கள் முதல் ஒருவாரம், பத்து நாட்கள் என சுத்தம் செய்யப்படாத தொட்டிகளில் கொட்டி ஊறவைத்து, பின் அவித்து காய வைப்பார்கள்....

வீட்டில் ஊறவைத்து அவிக்கும் போது, அதற்கே உரிய மனம் வரும். ஆனால், இங்கு அவிக்கும் போதே துர்நாற்றம்தான் வரும். மில் களங்களில் காயப் போட்டிருக்கும் போது, அந்த ஏரியா முழுவதுமே துர்நாற்றம் வீசும். ஆனால், அங்கு வசிப்பவர்கள் அதற்கு பழகி இருப்பார்கள். புதிதாக செல்வோர் மூக்கைப் பிடித்து கொண்டு நடையை கட்டுவார்கள். இதனை நானும் செய்திருக்கிறேன்.

ரேஷன் அரிசிக்கு என்று தனி நெல் ரகம் இருக்குன்னுதான் டவுனில் குடியிருக்கும் பெரும்பான்மையான மக்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள். 

அப்படி ரேஷன் அரிசிக்கு தனி நெல் ஒன்றும் இல்லை. அதே நெல்லை வீட்டில் நாம் பதப்படுத்தி அரைத்தால் அந்த அரிசி சூப்பராய் இருக்கும். அப்படியானால் அதே நெல்லிலிருந்து எப்படி ரேஷன் கடைகளில் விற்கும் அல்லது விலையில்லாமல் கிடைக்கும் நாற்றம் பிடித்த அரிசியை தயார் செய்கிறார்கள் என்பது ஒரு சிதம்பர ரகசியம். அதை நான் இப்போது உங்களுக்கு கூறப்போகிறேன்.

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் ஜில்லாவில்தான் சிவில் சப்ளை டிபார்ட்மென்டின் நெல் கொள்முதல் 90 சதம் நடைபெறுகிறது. குறிப்பாக குறுவை நெல் மகசூல் முழுவதும் சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் கொள்முதல் செய்துகொள்கிறது.

 குறுவை நெல் அறுவடை சமயத்தில் தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் மழை பெய்து கொண்டிருக்கும். அறுத்த நெற்பயிரை அப்படியே அடித்து வரும் நெல்லை சாக்கில் பிடித்து கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வந்து விடுவார்கள்.

நெல்லில் ஈரம் 10/15 சதம் இருக்கும். இதற்குக் கூடவே இருந்தாலும் இருக்கலாம். அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள் இவைகளின் பல போராட்டங்களால் இந்த ஈர நெல்லை அப்படியே கொள்முதல் செய்ய அரசு ஆணையிட்டிருக்கிறது. நெல்லில் ஊரப்பதம் எவ்வளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு விலையில் குறைத்துக்கொள்வார்கள். ஈரப்பதத்தை அளக்க புதுமையான கருவிகள் எல்லாம் உண்டு. இந்த கணக்கெல்லாம் போட்டு விவசாயி கொண்டுவந்த நெல்லைக் கொள்முதல் செய்வார்கள்.

இப்படிக் கொள்முதல் செய்த நெல் அப்படியே நெல் அரைவை மில்களுக்குப் போய்விடும். சிவில் சப்ளை டிபார்ட்மென்ட் இந்த மில்களுடன் ஒப்பந்தம் போட்டிருக்கும். ஈரப்பசைக்கான கழிவுகள் போக மிச்சமிருக்கும் நெல்லில் 68 சதம் அரிசி உற்பத்திசெய்து கொடுக்கவேண்டும். அதாவது இது புழுங்கல் அரிசிக்கான கணக்கு.

சாதரணமாகவே புழுங்கல் அரிசி தயார் செய்யும்போது 70 சதம் அரிசி கிடைக்கும். புழுங்கலரிசி தயார் செய்ய நெல்லை ஒரு முறை வேக வைப்பார்கள். ஆனால் இந்த மில்காரர்கள் இந்த நெல்லை இரு முறை வேகவைப்பார்கள். அப்போது அரிசி அவுட்டர்ன் 73 அல்லது 74 சதம் கிடைக்கும். ஆகவே சிவில் சப்ளை ரூல்படி 68 சதம் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் மீதி 6 சதம் மில்காரர்களுக்கு உபரி லாபம். தவிர ஈரப்பசை கணக்கில் பல குளறுபடிகள் செய்து அதிலும் லாபம் வரும்.

இப்படி தயார் செய்த அரிசி ஏறக்குறைய ஊறவைத்த அரிசி மாதிரி ஈரமாகத்தான் இருக்கும். அந்த அரிசியை சாக்கில் பிடித்து சிவில் சப்ளை கோடவுனுக்கு அனுப்பி விடுவார்கள். அந்த கோடவுன்களில் எப்போதும் 6 மாத ரேஷன் தேவைக்கான அரிசி ஸ்டாக் வைத்திருப்பார்கள். புதிதாக வந்த அரிசி மூட்டைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அட்டி போட்டு அடுக்கி வைப்பார்கள். இப்படி வந்த அரிசி ரேஷன் கடைகளுக்குப் போக எப்படியும் 6 மாதம் ஆகும். சில சமயம் அதற்கு மேலும் ஆகலாம்.

நாம் வீட்டுக்கு அரிசி வாங்கி வந்தால், நம் வீட்டுப் பெண்கள் அந்த அரிசியை ஒரு ஓரமாக கொட்டி பரத்தி வைப்பார்கள். இரண்டு நாட்கள் கழித்து அதை ஏதாவது பாத்திரத்தில் எடுத்து வைப்பார்கள். அப்போதுதான் அந்த அரிசியில் உள்ள ஈரப்பதம் போய் அரிசி கெடாமல் இருக்கும். 

அரிசி வாங்குவதில் அனுபவம் உள்ளவர்கள் அரிசி வாங்கும்போது இரண்டு அரிசியை எடுத்து வாயில் போட்டு கடித்துப் பார்ப்பார்கள். கடிக்கும்போது "கடுக்" என்று சத்தம் வரவேண்டும். அப்போதுதான் அந்த அரிசி நன்றாகக் காய்ந்த அரிசி என்று பொருள். அந்த அரிசியையே இரண்டு நாள் ஆறவைத்து பிறகுதான் எடுத்து வைப்பார்கள்.

சிவில் சப்ளை கோடவுனுக்கு வரும் அரிசி ஏறக்குறைய இட்லிக்கு ஊறவைத்த அரிசி மாதிரிதான் இருக்கும். இதை காற்றோட்டம் இல்லாத கோடவுனில் பத்துப்பனிரெண்டு மூட்டைகளாக அட்டி போட்டு ஆறு மாதம் வைத்திருந்தால் என்னென்ன மாறுதல்கள் அந்த அரிசியில் உண்டாகும் என்று யோசித்துப் பாருங்கள். அந்த அரிசி மக்கி, பூசணம் பிடித்து, கம கம என்று ஒரு ஸ்பெஷல் வாசனை ஏற்பட்டு மஞ்சள் கலராக மாறி இருக்கும். இதுதான் ரேஷன் அரிசி தயாரிக்கும் முறை....

புதன், 21 அக்டோபர், 2020

தேங்காய் சீனிவாசன் நினைவலைகள்



ஹலோ... யாரு ஜப்பான் மேனேஜர் சால்பத்திரி கும்மாவா நீ ஒரு ரெண்டுங்கெட்டான்யா தமிழும் தெரியாது இங்கிலீஷும் புரியாது சரி உனக்கு தெரிஞ்ச ஜப்பான் பாஷையிலேயே திட்டித் தொலைக்கிறேன்....

ஈப்பலத்தா ஈசக்கண்ணா ஈப்பலத்தாவோ ஆசைக்கண்ணே வைரமல்லா ஆனமல்லாவோ அஸ்கலக்கா லக்கா அஸ்கலக்கா புட் த போன்... 

உஜாங்கு மூக்குப் புள்ளி... ஊத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி ஊத்துத் தண்ணி... ஆ.. மோந்து... மோந்து... மோந்து...  ஆல் த ஜூடோஸ் ஃபாலோ மீ யா... ஆல் தி ஜிலேபிஸ் ரவுண்டா இருக்கும் மைசூர்பாக் சதுரமா இருக்கும் தட்ஸால் ஆ... என்னததே.. கில்பான்ஸா.. ஆ..  போன்ற பிரத்யேக வார்த்தை பிரயோகங்கள் தேங்காய் அவர்களின் சிறப்பு.. அவரின் உச்சரிப்பில் இதெல்லாம் கேட்டாலே சிரிப்பு அள்ளும்!

தேங்காய் சீனிவாசனின் டயலாக் டெலிவரி அவர் ஒருவருக்கே உரித்தானது.. அதே அதே..காசே தான் கடவுளடா போலிச் சாமியார்.. தில்லு முல்லு ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி.. டிக் டிக் டிக் பத்திரிக்கை எடிட்டர்.. இப்படி இவருக்காகவே உருவான கேரக்டர்கள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனித்துவம் பெற்றவை.. பின்னாளில் வில்லனாகவும் வந்து கலக்கியிருப்பார்.!

தமிழ் சினிமாவில் மறக்கவியலாத ஒரு அருமையான கலைஞர்.. நடிகர் டணால் தங்கவேலு தான் இவரது குருநாதர்.. சந்திரபாபுவுக்குப் பின் சென்னைத் தமிழை அநாசயமாக பேசி நடித்த நடிகர் இவரே! இவரைப் பற்றிய இன்னொரு முக்கிய செய்தி.... மக்கள் திலகம், புரட்சி நடிகர்... பொன்மனச்செம்மல்..

என்றெல்லாம் எம்.ஜி.ஆர் அழைக்கப்பட்ட காலத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்களால் மிகவும் விரும்பப்பட்ட "வாத்தியார்" என்னும் பட்டப் பெயர் வைத்தது இவர் தான்.. ஆனாலும் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர்.. இவரது சில நடிப்பு சிவாஜியை பிரதிபலிக்கும்.. அவரது நினைவு நாள் இன்று.. உடலால் மறைந்தாலும் நீங்கள் ரசிகர்கள் நினைவில் என்றும் வாழ்கிறீர்கள்

வியாழன், 15 அக்டோபர், 2020

கிரிக்கெட் வீரர் முரளிதரனை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?


1. ஈழத்தில்  தமிழ்மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்த நாளில் இறுதி கட்ட போரின் போது, போரை வெற்றிகரமாக முடித்த மகிந்த ராஜபக்சேவுக்கு நன்றி என்று கருத்து தெரிவித்தார் முத்தையா முரளிதரன்.

2. இனப்படுகொலை குறித்தான விசாரணைக்கு கோரிக்கைகள் எழுந்த போது, இங்கே அமைதி நிலவுகிறது. சர்வதேசம் இதனைக் குழப்ப வேண்டாம் என்று பேசினார் முரளி.

3. முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது, விடுதலை புலிகள் அமைப்பு அழிக்கப்பட்ட அன்றுதான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தேன். இனி இந்த நாட்டில் அமைதியாக வாழ முடியும் என்று எனக்குத் தோன்றியதுஎன கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் முத்தையா முரளிதரன் பேசியதாக சர்ச்சை எழுந்தது.

4. பிரிட்டர் பிரதமர் டேவிட் காமரோன் இலங்கை இனப்படுகொலை குறித்த பார்வையிட வந்த போது, காணாமல் போனவர்களின் தாய்மார்கள் கூடி அவரிடம் முறையிட்டனர். அப்போது, முப்பது தாய்மார்கள் கூடி போராடுவதால் இலங்கை அரசு தவறு செய்துவிட்டதாகச் சொல்ல முடியாது. யாரோ தூண்டிவிட்டு இயக்கும் நாடகம் என்று கிரிக்கெட் வீரர் முரளிதரன் பேசியதால் எதிர்ப்பு உண்டானது.

5. கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி 'தனக்கு தமிழ் தெரியாது’ என்று சிங்களத்தில் உரையாடியதால்  தமிழ் இளைஞர்கள் ஆத்திரமடைந்து வாக்குவாதம் செய்திட, முரளியைத் தாக்க முயன்றதாக அந்த இளைஞர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

6. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்பு இலங்கையின் தங்கல்லை பகுதியில் இரண்டு சிங்கள கிராமங்களைத் தத்தெடுத்து, தனது சொந்தப் பணத்தில் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார் முத்தையா முரளிதரன்.

7. தனது நட்சத்திர அந்தஸ்தால் இலங்கையில் எப்போது தேர்தல் நடந்தாலும் ராஜபக்சே ஆதரவாளராக தேர்தல் பரப்புரை செய்து வாக்கு சேகரிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளார் முரளி.

ஆக தமிழர்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை மக்களுக்கு எதிராக சிங்கள பேரினவாத அரசுக்கு ஆதரவாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ள முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை முத்தையா முரளிதரன்800 என்ற பெயரில் விஜய்சேதுபதியை வைத்து சினிமாவாக எடுக்க முயற்சிக்கும் போது எதிர்ப்பு வராமல் எப்படி இருக்கும்.

விஜய்சேதுபதி நடிகர் என்பதையும் தாண்டி மக்கள் மத்தியில் நல்ல பெயர் உள்ளது  அதை அவர் கெடுத்துக் கொள்ளக்கூடாது.. இது போன்ற படங்களை அவர் தவிர்க்க வேண்டும்..